Friday, April 10, 2009

பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு விளக்கம் ..

  • திருநங்கைகள் யாரையும் கட்டாயப்படுத்தி பெண்ணாக மாற்றுவதில்லை. தான் பெண்ணாக மாறி வாழ வேண்டும் என்று விரும்பி வரும் அரவானிகளைத்தான் பல சோதனைகளுக்குப்பின் அரவானி குடும்பததில் சேர்த்துக்கொள்வார்கள். தொடர்ந்து அந்த நபர் நிர்வாணம் என்றழைக்கப்படும் ஆணுறுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பி தொந்தரவு செய்தால்தான் பால் மாற்று அறுவை சிகிச்சைக்கு சம்மதிப்பார்கள். அரவானியாக அறியப்பட்டவர்களை கட்டாயப்படுத்தி யாரும் அறுவை சிகிசசை செய்வதில்லை.
  • பெண்தன்மை கொண்ட ஆண்குழந்தைகளை நம் குடும்ப கட்டமைப்புகள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதால், இந்த சமூகம் அத்தகைய குழ்ந்தைகளை கேலி கிண்டல் செய்து துன்புறுத்துவதால் அத்தகைய குழ்ந்தைகள் மனதளவில் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு முறையான கவுன்சலிங் தருவதற்கான ஏற்பாடுகள் இங்கு இல்லை. அத்தகைய குழ்ந்தைகள் வீட்டை விட்டு பெரும்பாலும் வெளியேறிவிடுகின்றனர். இதனால்தான் அவர்கள் பாதை மாறும் சூழ்நிலை ஏற்படுகின்றது. பெற்றவர்கள் தங்கள் குழ்ந்தைகளை வீட்டைவிட்டு விரட்டாமல் அவர்களை புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டால் இக்குழந்தைகள் வாழ்க்கை சீரழியாது. அரவானிகள் பெரும்பாலானவர்கள் அப்படி வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் அல்லது தாமே வெளியேறியவர்கள்தான்.
  • பொதுவாக திருநங்கைகள் பொதுவெளி சமூகத்தின் ஒரு அங்கமாக வாழ விரும்புகின்றனர். ஆண்களில், பெண்களில் தவறு செய்பவர்களைப்போல திருநங்கைகளில் யாரேனும் ஒருவர் தவறுசெய்ததாக அறியப்பட்டால் அதற்காக ஒட்டுமொத்த திருநங்கைகளையும் பழிப்பது சரியாகாது. திருநங்கைகள் சமூகத்திலும் அதிகாரம், பணபலம் உள்ள மிகச்சிலரால் பல திருநங்கைகள் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பை சட்டம்தான் வழ்ங்கவேண்டும்.
  • பொதுவாக திருநங்கைகள் ஏதாவது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டால் அவர்களை பெண்களுக்கான சிறையில்தான் அடைக்கவேண்டும். ஆண்களுக்கான சிறையில் அடைக்கும்போது அவர்கள் பாலியல் வன்முறைக்கு மட்டுமின்றி, பாதுகாப்பின்மைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இதை கவனத்தில்கொள்ளவேண்டும். கைது செய்யப்பட்டால் திருநங்கைகளை பெண்களுக்கான சிறையில்தான் அடைக்கவேண்டும்.
  • திருநங்கைகளின் வாழ்வாதார பிரச்னைகளை உங்கள் கட்டுரைகளின் மூலமாகவும், செய்திகள் மூலமாகவும் வெளியிட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய புரிதலையும், ஏற்றுக்கொள்ளலையும் ஏற்படுத்தி இருக்கிறீர்கள். பல்வேறு காலகட்டங்களில் எங்கள் போராட்டங்களுக்கும் துணையாய் இருந்திருக்கிறீர்கள். உதாரணமாக, ஈழத்தமிழர்களுக்கான எங்கள் உண்ணாநிலை நோன்பின்போது மிகப்பெரிய ஆதரவை தந்து செய்தி வெளியிட்டிருக்கிறீர்கள். அதற்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
  • தற்போது திருநங்கைகள் பற்றி ஒரு சம்பவத்தின் அடிப்படையில் செய்திகள் வந்துகொண்டிருப்பதால் பொதுமக்கள் திருநங்கைகள் அனைவரையும் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. சமூகத்தில் தங்களது அடிப்படைத்தேவைகளுக்கே போராடிக்கொண்டிருக்கிற திருநங்கைகளுக்கு சமூக அங்கீகாரம் தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் திருநங்கைகளுடைய உரிமைப்போராட்டத்தில் இதுபோன்ற ஊடகச்செய்திகள் சோர்வடையச்செய்கின்றன. இதை கருத்தில்கொண்டு செய்திகள் வெளியிடுமாறு பத்திரிக்கை நண்பர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
--

2 comments:

சிவசுப்பிரமணியன் said...

அருமையான விளக்கம் தோழி.. நம் நாட்டின் சமூக கட்டமைப்பு கொஞ்சம் கொளாறாக தான் இருக்கிறது.. இதை எதிர்ப்பவர்களை கலாச்சார துரோகி என்கின்றனர்.. இந்த நிலை மாற வேண்டும்.. நிச்சயம் ஒரு நாள் மாறும்

Naveen Krishna said...

Excellent words Kalki.

Your words, sound should reach
even much horizon for the
betterment of Transgender society.

Wishes
Naveen Krishna