Sunday, February 14, 2010

திருநங்கைகள் தெருவுக்கு வருவது பெற்றோரால்தான் ...

அள்ளி அணைக்காவிட்டாலும் ....அடித்துத் துரத்தாதீர்கள் !

வீட்டிலிருந்து அடித்துப் பிடித்து ஓடி வந்து பஸ் ஏறுவோம். அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு ஸீட் மட்டும் காலியாக இருக்கும். ஒடிப்போய் உட்கார நினைக்கையில், அதில் ஒரு 'திருநங்கை' உட்கார்ந்திருந்தால்... 'உட்காருவதா, வேண்டாமா' என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடத்திவிட்டு, நம்மில் பெரும்பாலானோர் அவருடன் சேர்ந்து உட்கார மனம் (?) இன்றி, கால் வலித்தாலும் நின்று கொண்டே பயணம் செய்வோம்.

என்ன குற்றம் செய்தாலும் 'எம்புள்ள' என்று நம்மைக் கொண்டாடும் தாய் போல, அந்த திருநங்கைக்கும் ஒரு தாய் இருக்கிறார்தான். ஆனால், அந்தத் தாயும் வீட்டை விட்டுத் துரத்தி விடுவதால்தான், தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக பலர் பிச்சை எடுக்கிறார்கள்; சிலர் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள்; ஒட்டுமொத்தமாக சமூகத்தின் விளிம்பிலேயேநிற்கவைக்கப்படுகிறார்கள். மைய நீரோட்டத்துக்குள் அவர்களை அனுமதிப்பதேயில்லை.

அது ஏன்?

'பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்டால்... இவர்களின் இருப்பும், வாழ்வும் ஒரு சமூகப் பிரச்னையாக உருவாகாது!' என்கிறது, அவர்களைப் பற்றி பேசுவதற்காக 'அவள் விகடன்' ஏற்பாடு செய்த இந்த கலந்துரையாடல்! பிரச்னையின் வலி, தீர்வுக்கான வழி என்று ஆலோசிக்கும் இந்தக் கலந்துரையாடலுக்கு, 'திருநங்கை' கல்கி, 'குடும்பநல ஆலோசகர்' மாக்தலின் ஜெயரத்னம், பெற்றோர் பிரதிநிதியாக மீனா, பதின்பருவத்தினரின் பிரதிநிதிகளாக தாமரைச்செல்வி, ஷபனா ஆகியோரின் வார்த்தைகள் வலு சேர்த்தன.



பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின் பரிமாறப்பட்டன வார்த்தைகள்!

கல்கி: இப்படி டீன்-ஏஜ் பெண்கள், ஒரு அம்மா, ஆலோசனை சொல்ல ஒரு ஆலோசகர்னு எல்லாரும் திருநங்கைகள் நிலமை பத்தி பேச வந்திருக்கறதே என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்களை எப்பவுமே இழிபிறவிகளா நினைக்கற, நடத்தற இந்தச் சமூகம் ஒரு விஷயத்தை நினைச்சுப் பார்க்கணும். இப்படி பிறந்தது எங்களோட தவறா...?

தாமரைச்செல்வி: சமூகம் இதைப் புரிதல் இல்லாம பார்க்கறது வருத்தமானதுதான்! பட், எனக்குத் தெரிஞ்சு எங்க டீன் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல யாரும் திருநங்கைகள் பத்தி இழிவாப் பேசறது கிடையாது. ஆனா, நீங்க 'எப்படி' இருப்பீங்கங்கறதைப் பத்தி எங்களுக்கு நிறைய கன்ஃப்யூஷன்ஸ்...

கல்கி: புரியுது. நிறைய பெரியவங்களுக்கும் இந்தக் குழப்பம் இருக்கு. திருநங்கைகள்ல இரண்டு வகை இருக்கோம். ஆணாப் பிறந்து, மனதளவில் பெண்ணா வாழ்ந்து, குறிப்பிட்ட கட்டத்தில் பெண்ணாவே மாறுறவங்க ஒரு வகை. இவங்க தங்களோட பாலின அடையாளமான ஆண் உறுப்பை ஆபரேஷன் மூலமா நீக்கிட்டு... மனதாலும், உடலாலும் பெண்ணாவே வாழ்வாங்க. பிறப்பால் பெண்ணாப் பிறந்து, மனதளவுல தங்களை ஆணா உணர்றவங்க, இன்னொரு வகை. சில கேஸ்கள்ல இரு பாலின உறுப்புகளோட சேர்ந்து பிறக்கறவங்களும் உண்டு.

மீனா: கல்கி, எந்த வயசுல இப்படி மாற்றம் உண்டாகும்..?

கல்கி: எல்லா பெற்றோர்களும் தெரிஞ்சு வச்சுக்க வேண்டிய விஷயம் இது. டீன்-ஏஜுலதான் முழுமையா தெரியும்னாலும்... எட்டு வயசுலயிருந்தே இந்த மாற்றம் ஆரம்பிக்கும். அப்போ பேசுறது, நடக்குறதுனு எல்லா செய்கைகளும், 'பாடி லாங்குவேஜு'ம் பெண் பிள்ளைகளுக்கு ஆண்கள் போலவும், ஆண் பிள்ளைகளுக்கு பெண்கள் போலவும் மாறும்.

மீனா: இது மனசுக்குள்ள நடக்கற மாற்றம்தானே... அத நாம மனசு வச்சா மாத்த முடியாதா...?

மாக்தலின்: இதுதான் எல்லா பெற்றோரின் எண்ணமும், கோபமும். 'ஏன் இப்படி நடந்துக்கற...? ஒழுங்கா லட்சணமா ஆம்பளப் புள்ள மாதிரி இரு'னு ஆரம்பிக்கற அவங்களோட கோபம், அப்புறம் அடி, சூடுனு மொழி மாறும். ஆனா, அந்த குழந்தையால அப்படி ஈஸியா மாத்திக்க முடியாது. ஏன்னா, இங்க ஒரு பெண்ணோட 'மனசு' ஆணோட 'உருவ'த்துக்குள்ள சிறைபட்டுக்கிடக்கு. ஆண் உருவத்துக்குள்ள இருக்கேங்கற காரணத்துக்காக, ஆணா நடந்துக்க முடியாது. அதை பெற்றோர்கள் புரிஞ்சுக்கணும்.


கல்கி: கூடவே, திருநங்கையா மாறிகிட்டுயிருக்கப்ப, 'நாம் ஆண் பிள்ளைதானே... அப்பறம் ஏன் பொண்ணு மாதிரியே நடந்துக்கத் தோணுது..?'னு அந்த குழந்தைக்கேவும் பயங்கரமான குழப்பம் இருக்கும். 13-14 வயசான டீன்- ஏஜ்ல இந்த உடல், மனமாற்றம் சீரியஸாகி, அவங்களை ஆட்டிப்படைக்கும்.

மாக்தலின்: இப்படி உடல் மாற்றம் ஒரு பக்கம் கஷ்டப்படுத்தும்னா, அப்பத்தான் பெற்றோர்களோட டார்ச்சரும் அதிகமா இருக்கும். 'எனக்குப் போயி ஏன் இப்படி ஒரு புள்ள பொறந்துச்சு'னு ரொம்பத் துன்புறுத்த ஆரம்பிப்பாங்க. அம்மா, அப்பா பண்ற டார்ச்சர் தாங்க முடியாம, ஏழாவது எட்டாவது படிக்கற அந்தக் குழந்தை வீட்டை விட்டு ஓடிடும்.

ஷபனா: அம்மா, அப்பாவுக்கும் இது கஷ்டமான சூழ்நிலைதானே? வீட்ல ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ஒருத்தருக்கு 'இப்படி' பிரச்னைனா இன்னொருத்தருக்கு எப்படி கல்யாணம் நடக்கும்...?
மீனா: இதுதான் ஒவ்வொரு குடும்பத்துலயும் வர்ற தர்மசங்கடமான சூழ்நிலை. இன்னொரு பெண்ணைப் பார்க்க வர்ற மாப்பிள்ளை, 'ஐயோ.. நாளைக்கு இந்தப் பொண்ணும் இப்படி மாறிட்டா என்ன பண்றது'னு தயங்கி, அந்த பெண்ணோட கல்யாணமும் பாதிக்கப்படுது.
கல்கி: ஆனா, இது ஒரு நோய் கிடையாது. உடல் ஊனம்னுகூட சொல்ல முடியாது. பரம்பரையா பரவக்கூடிய வியாதியும் கிடையாது. அதனால அக்காவுக்கு பிரச்னை இருந்தா, தங்கச்சிக்கும் பிரச்னை வருங்கறதுக்கு... நோ சான்ஸ்! புரிஞ்சுக்கோங்க!

மாக்தலின்: பெற்றோர்கள் மட்டுமில்ல... அந்த குழந்தைகளோட டீச்சர்களும் இதப் புரிஞ்சுக்கணும். எங்கிட்ட வர்ற நிறைய கேஸ்கள்ல, டீச்சர்கள் 'இப்படி' நடக்காதேனு அந்தக் குழந்தைகள ரொம்பக் கடுமையா தண்டிச்சிருக்காங்க, மோசமான வார்த்தைகளால திட்டியிருக்காங்க.

ஷபனா: டீச்சர்ஸ§க்கு மட்டுமில்ல... அவங்க கூட இருக்குற ஃப்ரெண்ட்ஸ§ம் அவங்களுக்கு சப்போர்ட்டிவா இருக்கணும். என் காலேஜ்ல எங்களுக்கு இப்படி ஒரு திருநங்கை ஃப்ரெண்டா கிடைச்சப்போ... நாங்க அவளை வித்தியாசமா நடத்தினதில்ல. ஆனா, இது எல்லா இடங்களிலும் நடக்கிறதில்லைங்கறதுதான் பிரச்னை.
தாமரைச்செல்வி: அக்கா, என் கேள்வி உங்களை கஷ்டப்படுத்தினா... ஐ'ம் ஸாரி. ஆனா திருநங்கைகனாலே பிச்சை எடுக்கணுமா...? கெட்ட வார்த்தைகள்ல திட்டணுமா...? பாலியல் தொழில்தான் செய்யணுமா...?
கல்கி: இதுதான் இந்தச் சமூகம் எங்க மேல வச்சிருக்க அபிப்ராயம். ஆனா, நாங்க ஏன் பிச்சை எடுக்கிறோம்? எங்களுக்கு படிப்பறிவு இல்லை. எங்களுக்கு படிப்பு வராம இல்லை. நாங்க ஸ்கூல்ல படிக்கிற நேரத்துலதான், இந்த மாற்றம் நடக்குது. அப்பா, அம்மாவே அவமானத்துக்குப் பயந்து எங்களை வீட்டை விட்டுத் துரத்திடறாங்க. அந்த பதினாலு, பதினஞ்சு வயசுல... எங்களுக்கு வேலை தரவும் யாரும் முன் வர்றதில்லை. நாங்க என்ன செய்வோம்? எங்களுக்கும் பசிக்கும்தானே? பிச்சையெடுக்கறோம். சிலர் பாலியல் தொழிலுக்குப் போறாங்க.
நாங்க கெட்ட வார்த்தைகள்ல திட்டுறோம்னு சொல்றீங்க. மறுக்கல. ஆனா, எங்கள கடந்து போறவங்கள்ல இருந்து சினிமா வரைக்கும் என்ன மாதிரி வார்த்தைகள்ல எல்லாம் இந்த சமூகம் எங்களை கொல்லுது?! (கனத்த மௌனம். பிறகு தொடர்கிறார்) நாங்கதான் மிகக் கொடுமையான அளவுக்கு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகறோம்... போலீஸ் ஸ்டேஷன்லகூட! எங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பும் இல்லை. இப்படியெல்லாம் எங்களை இந்தச் சமூகம் டார்ச்சர் பண்ற அளவுக்கு, அப்படி நாங்க என்ன குற்றம் செஞ்சோம்?
மாக்தலின்: திருநங்கைகளோட பிரச்னைகள் வெளிய தெரிஞ்சதே, இந்தியால எய்ட்ஸ் நோய் பெரிய அளவுக்கு வந்த பின்னாடிதான். வரும் காலத்துல மிகப் பெரிய சமூகப் பிரச்னையா இது உருவாகாம தடுக்கறது பெற்றோர்களோட கையிலதான் இருக்கு. ஒரு வீட்ல குழந்தை ஊனமா, மனவளர்ச்சி குன்றி பிறந்தா அந்த குழந்தையை எப்பாடுபட்டாவது காப்பாத்தறோம். அதேமாதிரி திருநங்கையா ஒரு குழந்தை உருவாக நேருச்சுனாலும், 'இது நாங்க பெத்த குழந்தை. யார், என்ன சொன்னாலும் இதை நாங்க கஷ்டப்பட்டு வளர்த்துதான் ஆவோம்!'னு பெற்றோர்கள் உறுதியா நினைச்சா, வைராக்கியமா இருந்தா... அது வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இருக்காது. அதே வீட்ல அது மற்ற குழந்தைகளைப்போல திறமையான குழந்தையா வளரும். அது பெற்றோர் மனசு வச்சாத்தான் நடக்கும். அந்த உறுதி பெத்தவங்களுக்குத்தான் வரணும்.
கல்கி: இது பெத்த உங்க குற்றமும் இல்லை. பிறந்த எங்க குற்றமும் இல்லை. இயற்கையோட குற்றம். அதுமட்டுமில்ல... இயற்கையில இதுவும் ஒரு படைப்புனே சொல்லலாம். ஆண், பெண்... இது ரெண்டுதான் மனிதப் படைப்புகள்னு யாரு முடிவெடுத்தது? மூணாவதாவும் ஒரு பாலினம் புராண, இதிகாச காலத்துல இருந்தே இருக்குதே! அர்த்தநாரீஸ்வரர்ங்கற பேருல ஈஸ்வரனை வழிபடற நீங்க... அதோட உருவமா வலம் வர்ற எங்கள இகழ்ந்து தள்ளறீங்க. மகாபாரதத்துல அர்ஜுனன் ஒரு வருஷ காலத்துக்கு திருநங்கையா வருவார். அதேபோல, சிகண்டிங்கற ஒரு கேரக்டரும் அதுல உண்டு. மகாபாரத சீரியல் போட்டா விழுந்து விழுந்து பாக்கறீங்க. அர்ஜுனா விருது கூட உண்டாக்கியிருக்கீங்க. ஆனா, நிஜத்துல எங்களை குறைந்தபட்சம் உயிருள்ள ஒரு ஜீவனாகூட ஏத்துக்கல. வீடுகள்ல நாயைக் கூட வளர்க்கறீங்க... ஆனா, கூடவே பொறந்த எங்களை துரத்தி அடிக்கறீங்க.
மாக்தலின்: இதெல்லாத்துக்கும் காரணம்... பரஸ்பர அன்பு பாராட்டல் என்கிறதை விட்டுட்டு, எல்லாத்தையுமே சமூகம், அந்தஸ்து, கௌரவம்கிற தராசுல வெச்சு மனித சமுதாயம் நிறுத்த பார்க்க ஆரம்பிச்சதுதான்.
கல்கி: சரியா சொன்னீங்க. ஒரு 200 வருஷத்துக்கு முன்ன வரைக்கும் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. மூணாவது பாலினமா... கௌரவத்தோடதான் வலம் வந்திருக்கோம். அதுக்குப் பிறகுதான், நாகரிக வளர்ச்சிங்கற பேருல... ஒரு இனத்தையே இப்படி கேவலமா மாத்திட்டாங்க.
இப்பவும் கெட்டுப்போகல.. உங்க அன்பும் அரவணைப்பும் எங்களுக்கு கிடைச்சா, எங்க மேல இந்த ஈனப் பார்வையெல்லாம் விழாம எல்லாரையும்போல நாங்களும் மனிதர்களா வாழ்வோம்! எங்களுக்கான சந்தோஷம், உரிமை பெத்தவங்களாலயே மறுக்கப்படுவது நியாயமா...?! நீங்க கொடுக்க ஆரம்பிச்சா, மொத்த சமூகமும் தன்னால தரும்.
தருவோமா?!

AvaL Vikatan - December 04, 2009

No comments: