Friday, December 26, 2008

தமிழ் திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு கோரிக்கை..

தமிழ் திரைப்பட இயக்குநர்களுக்கு கல்கியின் கோரிக்கை என்னவென்றால்....

Friday, December 12, 2008

தமிழக அரவானிகளின் உண்ணாநிலை ஒப்பாரி போராட்டம் - ஒரு வரலாற்று சம்பவம்..






இலங்கையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்படும் அவலம் எங்கள் திருநங்கையர்களை கவலைகொள்ள வைத்திருக்கிறது. ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள் என்பதை நினைக்கும்போது இதயத்தை பிடுங்குவதுபோல் ஒரு உணர்வு. போரின் கொடுமைகளை செவிவழியாக கேட்கும்போதே மனம் நடுங்குகிறது, வலிக்கிறது.

இதுவரை எங்களுடைய அடிப்படை உரிமைகள், தேவைகளுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருந்த நாங்கள் முதன்முறையாக ஒரு மிகப்பெரிய போராட்டமாக கடந்த பலவருடங்களாக இருந்துகொண்டிருக்கும் நமது தமிழீழ சகோதர சகோதரிகளுக்காக ஒரு உண்ணாநிலை ஒப்பாரி போராட்டம் ஒன்று சென்னையில் கடந்த டிசம்பர் 8 ந்தேதி நானும் எனது திருநங்கை சகோதரி பிரியா பாபுவும் இணைந்து நடத்தினோம்.

போரை நிறுத்த வலியுறுத்துவதுதான் எங்கள் போராட்டத்தின் முக்கிய நோக்கம். நாங்கள் உண்ணாநிலையில் இருந்தால்மட்டும் போர்நின்று விடாது என்பதை நாங்கள் நன்றாகவே அறிவோம். ஆனால் அரவானிகள் இத்தகைய ஒரு போராட்டம் செய்யும்போது ஒரு சின்ன அதிர்வாவது ஏற்படும் அல்லவா? அதற்காகத்தான்.

மேலும் தமிழர்களின் முக்கிய பிரச்சனை இது. ஈழ போராட்டத்தை, தமிழர் படும் பாட்டை நன்றாக நன்றாக அறிந்துவைத்துள்ளோம். எங்களுக்கு அதன் கவலை உண்டு. அதற்கான அரவானிகளின் பதிவு மிக தேவை . அதை நன்றாகவே பதிவு செய்தோம் நாங்கள். எங்களின் இந்த உண்ணாநிலை போராட்டத்திற்கு கனிமொழி அவர்களும், திரு. ஜெகத் கஸ்பர் அவர்களும் மிக உதவினார்கள். அவர்களுக்கு எங்கள் நன்றிகள். திருநங்கைகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள்.

ஈழத்தமிழர்களை நாங்கள் ஆதரிக்கிறோம். போரை எதிர்க்கிறோம். எங்கெல்லாம் தமிழினம் உள்ளதோ அங்கெல்லாம் அமைதி தழைக்க வேண்டும்.

Wednesday, October 08, 2008

திருநங்கைகளுக்கு இலவச கல்வி வேண்டும்..

தெருவுக்கு தெரு திருநங்கைகள் பிச்சை கேட்கும் போக்கு மிகவும் அதிகரித்துவிட்டது. நான் சமீபத்தில் சில புத்தக நகல்கள் எடுப்பதற்காக ஒரு கணினி சேவை மையத்திற்கு சென்றிருந்தேன். அழகான ஒரு திருநங்கை அந்த சேவை மையத்திற்கு முன்னால் வந்து நின்று கொண்டார். நானும் ஒரு திருநங்கை என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சேவை மைய உரிமையாளர் பத்து ரூபாய் ஒன்றை அவருக்கு பிச்சை பணமாக கொடுத்தார். அவர் மனம் உவந்து கொடுக்கவில்லை. அந்து திருநங்கை இடத்தை காலி செய்தால் போதும் என்பதுதான் அவர் மனநிலை. இன்று இப்படித்தான் திருநங்கைகளின் நிலை இருக்கிறது.

ஒவ்வொரு கடையிலும் ஆள் மாற்றி ஆள் என குறைந்தது மூன்று திருநங்கைகள் பிச்சை கேட்டு ஒரு நாளில் வருகின்றனர். சில சமயங்களில் கூட்டாக நான்கைந்து பேரும் வருவதுண்டு. கடைக்காரர்கள் பெரும்பாலானவர்கள் மனமுவந்து கொடுப்பதில்லை. என் இவர்கள் பிச்சை எடுக்கின்றனர்? வீட்டு வேலை செய்யலாம்? எத்தனையோ வேலை இருக்கின்றதே என்று பலர் கேட்கின்றனர். அப்படிக்கேட்பவர்களிடம் நான் ஒன்றுதான் கேட்பேன். உங்கள் வீட்டில் வேலைக்காரியாகவாவது ஒரு திருநங்கையை ஏற்றுக்கொள்வீர்களா?

இந்த சமூகம் திருநங்கைகளை ஏற்றுக்கொள்ள இன்னும் தயங்கிகொண்டுதான் இருக்கிறது. வீட்டு வேலைக்காரியாகக்கூட ஏற்றுக்கொள்ளத்தயங்குகின்றனர். எனவேதான் பிச்சை எடுப்பதும் பாலியல் தொழில் செய்வது மட்டுமே திருநங்கைகளால் இயல்கிறது. திருநங்கைகளுக்கு கல்வி முக்கியம். அரசும் அரசு சாரா தனியார் கல்வி நிறுவனங்களும் திருநங்கைகளுக்கு இலவசக்கல்வி வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். கல்வி ஒன்றுதான் அவர்கள் வாழ்வை உயர்த்தும்.

Thursday, September 25, 2008

திருநங்கையர் வாழ்வு மலர அரசு என்ன செய்ய வேண்டும்?

என் தோழி மோனல் மற்றும் என் குரு அப்சரா ஆகியோருடன் ஒரு கலந்துரையாடல். திருநங்கைகளின் வாழ்வு உயர அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எங்களுடைய உரையாடல்.

Wednesday, September 10, 2008

என் நடனம்.. என் வாழ்க்கை..

இந்த நடனம் யூ ட்யூபில் பிரபலமாக இருக்கும் ஒரு ஒளிப்படம். ஆரோவில்லில் நான் வாழ்ந்தபோது என்னால் பதிவுசெய்யப்பட்டது. எனக்கு மிகவும் பிடித்த எனது பதிவுகளில் ஒன்று. ஒரு சந்தோஷமான பெண் இபடித்தான் இருப்பாள் என்று நினைக்கிறேன். காட்டாறுபோல், பறவைபோல்.

Sunday, August 24, 2008

சென்னையில் ஒரு வீடு ...

சென்னைக்கு வந்தபின் என் அலுவலகம் இருக்கும் சைதாபேட்டை பகுதியில் இரண்டு நாட்களாக ரோஸின் ஸ்கூட்டி பெப்பில்அலைந்துகூட வீடு கிடைக்கவில்லை. ஒரு வீட்டில் திருநங்கை என்று தெரிந்ததாலேயே வீடு மறுக்கப்பட்டேன். மனம் வெதும்பி இருந்தவேளையில் ரோஸ் ஆறுதல் சொன்னதுமட்டுமல்லாமல் என்னை உற்சாகப்படுத்தினாள்.

கடைசியாக நேற்று மாலையில் ஒரு இரண்டுமாடி கட்டிட வீட்டில் மொட்டைமாடியில் ஒரு சிறிய வீடு கிடைத்தே விட்டது. கல்கி திரைப்படத்தில் கல்கி தங்கியிருப்பாளே அதுபோல ஒரு வீடுதான்.

வீட்டு உரிமையாளரிடம் நான் திருநங்கை என்று சொல்லவில்லை. அந்த அவசியமும் ஏற்படவில்லை. பின்னொருநாள் அவர்களே கண்டுகொள்வார்கள். அப்போது பார்க்கலாம். அதன்பிறகு பிரியாபாபுவை சந்தித்துவிட்டு ஆட்டோவில் என் அலுவலத்திற்கு வருவதற்குள் அந்த ஆட்டோவை ஓட்டிவந்த இரண்டு பேரில் ஒருவன் கையை நீட்டி என் காலை வருடுவதும் என்னை தடவ முயற்சிப்பதுமாக இருந்தது என்னை அதிர்ச்சியடைய வைத்தது. சட்டென்று என் அலுவலகம் வர இறங்கிக்கொண்டேன். சண்டை போட்டிருக்கலாம். ஆனால் நான் சண்டைபோடவில்லை. மிகப்பெரிய மாற்றங்களுக்கு விதைபோடும் சமயத்தில் இந்தமாதிரி மனிதர்களிடம் என் சக்தியை சிதறடிக்க விரும்பவில்லை.

Friday, August 08, 2008

இனி சென்னைவாசி நான் ..

இந்த மாதம் மூன்றாவது வார இறுதியில் சென்னைக்கு குடி பெயர்ந்துவிடுவேன். என் சொந்த ஊர் பொள்ளாச்சி - நகரமும் கிராமமும் இணைந்த ஒரு கலவை. என் ஊர் அழகின் இலக்கணம் . இந்த ஊரிலிருந்து அங்கு செல்ல எனக்கு சற்றே சற்று தயக்கம் இருந்தாலும் இந்த மாற்றம் அற்புதங்கள் நிகழ்த்தும்.

சென்னையில் நல்ல வீடு கிடைப்பது மிகவும் அரிது என்று எனக்குத்தெரியும். திருநங்கைகளுக்கு மிகமிக அரிது எனவும் எனக்குத்தெரியும். நான் அதிர்ஷ்டக்காரி. சென்னையில் எனக்கு தோழிகள் நல்ல நண்பர்கள் அதிகம். நான் கொடுத்து வைத்தவள். இரண்டே நாட்களில் எனக்கென்று வீடு அமையும்.

Saturday, July 12, 2008

தமிழ் செல்வந்தர்களுக்கு ஒரு கோரிக்கை...



இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்காக தொடங்கப்பட்டு
நிதிஉதவி ஏதும் இல்லாததால் நின்று போன எனது 'சகோதரி' பத்திரிக்கையை மீண்டும் தொடரவேண்டும்.

திருநங்கைகளின் வாழ்வாதார பிரச்சினைகள், தீர்வுகள், அவர்தம் படைப்புக்களையும் தாங்கிவந்த இந்த சிற்றிதழ் நின்றுபோனது என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. 'சகோதரி' மீண்டும் உயிர்பெற வேண்டும்.

Sunday, June 29, 2008

பொம்மைகளுடன் விளையாடுவேன் !

பள்ளிப்பருவத்தில் நிறைய பொம்மைகளுடன் விளையாட மிகவும் ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் அப்பா எனக்கு கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்தாலும் பொம்மைகள் மட்டும் நிறைய வாங்கித்தரமாட்டார். அப்போதுவிளையாடிய பொம்மைகளில் இப்போது என் நினைவுகளில் உள்ளதெல்லாம் ரயில் பொம்மையும், துப்பாக்கி பொம்மையும்தான். சாவி கொடுத்தால் ஆடும் குரங்கு பொம்மை, காற்றடைத்த வாத்து பொம்மை, பஞ்சு பொம்மை, பாபி பொம்மை என்று நான் ஆசைப்பட்டதெல்லாம் எனக்கு கிடைக்கவில்லை. இப்போது அவற்றுடன் விளையாட ஆசையாய் இருக்கிறது. வெட்கப்படாமல் ஒவ்வொன்றாக வாங்கி கண்டிப்பாக விளையாடுவேன்.

Sunday, May 18, 2008

தமிழக அரசுக்கு நன்றி.... இப்போதைக்கு..

'திருநங்கை' என்ற மூன்றாம் பாலின பிரிவை சேர்த்துக்கொள்ள ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றிகள். பல ஆண்டுகளாக திருநங்கைகளின் வாழ்வுரிமைக்கான போராட்டம் என்பது பல அவமானங்கள், புறக்கணிப்புக்கள், ஏமாற்றங்களை தாண்டியும், தாங்கியும்தான் நடந்துவருகிறது.

இதில் பிரியாபாபு, ஆஷாபாரதி போன்றவர்களின் அரும்பணி குறிப்பிடத்தக்கது. இருவரும் சட்டத்தோடு போராடியிருக்கிறார்கள். மேலும் பலர் முக்கியப்பணி ஆற்றியிருக்கிறார்கள். இன்னும் திருநங்கைகளின் உரிமைக்கான போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆனால் ரோஸ் மற்றும் என்னுடைய வழிகள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். சாதனைகள்தான் வெற்றிகளையும் மாற்றங்களையும் மகுடங்களாக சூட்டும் என்பதை இருவரும் அறிவோம். அதற்காக உழைக்கிறோம். மாற்றங்களை மக்கள் மனதில் உருவாக்குகிறோம்.

தமிழக அரசுக்கு நன்றி.... இப்போதைக்கு..

Thursday, April 24, 2008

புலிகள்... பிரபாகரன்....



தமிழீழ விடுதலை பற்றி எழுதவேண்டும் என்று வெகுநாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழர்கள் அங்கே கொல்லப்படும்போது இங்கேஅமர்ந்து யாகூவில் அரட்டை அடிக்கும் யுவதிகளில் நானும் ஒருத்தி என்று வெட்கத்துடன் கூறிக்கொள்கிறேன். பள்ளிப்பருவத்தில் பிரபாகரனின் புகைப்படத்தை முதன்முதலில் பார்த்தபோது அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்து ஒரு சல்யூட் அடிக்க ஆசைப்பட்டிருக்கிறேன். எனக்கு தெரிந்த ஒரே வீரத்தமிழன் அப்போது அவர்தான். தீவிரவாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. துப்பாக்கி விடுதலை தரும் என்று என்றும் நான் நம்பியதில்லை. அமைதிப்பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு தரும் என்பது எனது கருத்து. எத்தனை ரத்தங்கள, எத்தனை படுகொலைகள்... ஈழத்தில் பெண்களும், குழந்தைகளும் கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்படும் நிகழ்வுகள் கற்பனைக்கெட்டாத சோகங்கள்.




ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது நானும் கோபப்பட்டேன். பிரபாகரன் இந்தியர்களின் முதுகில் குத்திவிட்டார் என்று அப்போது நினைத்தேன். பிரபாகரன் செய்தது சரியா தவறா என்று கேட்டால் ஒரு தமிழச்சி என்பதால் சரி என்பேன். ஒரு இந்தியப்பெண் என்பதால் தவறு என்பேன். தமிழர் எண்ணம் அதுதான்.
பெண் புலிகளை பற்றி நிறைய தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஆயுதம் தொட காரணம் என்ன? அவர்கள் வாழ்வில் நடந்த துயரங்களா அல்லது மண்ணின் மேல் உள்ள பற்றா? பெண்மையின் மென்மை அவர்களிடம் இன்னும் உண்டா? ஒரு திருநங்கையும் ஒரு பெண் புலியும் சந்தித்தால்....

Thursday, April 17, 2008

ரோஸ் கல்கி நட்பு..






ரோஸ் விஜய் டிவியில் 'இப்படிக்கு ரோஸ்' என்ற நிகழ்ச்சியை வழ்ங்குகிறாள். சென்ற வாரம் ஒரு முக்கிய திருநங்கைகள் சந்திப்பில் ரோசும் நானும் சந்தித்தோம். திருநங்கைகளின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் கொண்டுவருவதற்கான சந்திப்பு. பல முக்கிய விஷயங்களை பற்றி விவாதித்தோம். சந்தித்த நிமிடம் முதல் இரண்டு நாட்கள் பிரியவில்லை. பீச், ஷாப்பிங், சும்மா பெப் வண்டியில் ஊர் சுற்றுவது என்று மிக மிக ரசித்தோம் ஒவ்வொரு நிமிடமும்.



இரவுகளில் பெண்கள் சென்னையில் தனியாக பயணிக்க முடியாது என்று அப்போதுதான் அறிந்துகொண்டேன். இரண்டு சக்கர வண்டியில் எங்களால் தனியாக போகமுடியவில்லை. ஆண்களின் கிண்டலும், அழைப்புகளும் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றால் ரோஸ் மிகவும் கோபப்பட்டாள். ஒரு இடத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் எங்களை வெகுதூரம் தொடர்ந்துவந்தது மிகுந்த வேதனையை உண்டாகியது. ரோஸ் அந்த ஆளை அடிக்காத குறைதான். இருவரும் கண்டித்து அனுப்பினோம். . ஆண்கள் இத்தனை வெறியோடு அலைகிறார்கள் என்று நினைக்கும்போது பயமாகத்தான் இருக்கிறது.

Saturday, March 29, 2008

உறவுகள் முறிவுகள் பிரிவுகள்..

நட்பு. ஒரு தெய்வீகமான உணர்வு. நட்பில் விளையும் நேசம் ஒரு அற்புதம் அல்லவா? அதற்கு ஈடு இணை எது? என் நண்பர்கள் என் உயிரில் கலந்தவர்கள். ஆனால் நான் என்னை நானாக மாற்றிக்கொண்ட பிறகு நான் மிகவும் நேசித்த சிலர் என்னை விட்டு விலக ஆரம்பித்தனர். என் இதயத்தில் அவர்கள் வாளைச்சொருகிய் நிகழ்வுகள் உண்டு. வலிகள் தரககூடிய அந்த நினைவுகள் சில சமயங்களில் என்னை தின்னதொட்ங்கும்.

என் கடமைகளில் முதன்மை


எனது கடமைகள் எங்கே என்பதை நான் தெளிவாக அறிந்துள்ளேன் திருநங்கைகள் மற்றும் பாலினத்தால் மாறுபட்டவர்கள் பற்றிய விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் ஏற்படுவது மிக மிக அவசியம். ஏனெனில் நாளைய தலைவர்கள் அவர்கள்தான். இந்த நாட்டின் சட்டம், அரசியல், கொள்கைகள் இவற்றை நிர்ணயிக்கப்போவது அவர்கள்தான். அவர்கள் நெஞ்சங்களில் உள்ள அறியாமை என்ற நஞ்சை அகற்றி உண்மை என்ற மருந்தை புகட்டுவது என் கடமை. இதில் சவால்கள், அவமானங்கள், இனிய அனுபவங்கள் எல்லாமே நேரக்கூடும் என்பதை நான் நன்றாகவே அறிந்துள்ளேன்.
கல்லூரிகள், பல்கலைகழகங்களுக்கு செல்கிறேன். மேலும் பல கருத்தரங்கங்களுக்கும் செல்வேன். எழுத்துக்களை வாசிக்கும் இளைஞர்கள் எத்தனைபேர் என்று தெரியவில்லை. எனவே நேருக்கு நேர் சந்திப்புகளும், உரையாடல்களும், செமினார்களுமே ஆரம்பத்தில் மாற்றங்களின் அசைவுக்கு உதவும். குறிப்பாக சமூகவியல், சமூகசேவை பற்றிய பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு இந்த விழிப்புணர்வு மிகவும் தேவை.

Monday, March 24, 2008

அனுதாபமும், பரிதாபமும் அவர்களிடமே இருக்கட்டும்..

திருநங்கைகள் மேல் அனுதாபமும், பரிதாபமும் கொள்வது தேவையற்றது என்பது என் கருத்து. எங்களுக்குரிய உரிமைகளை தரவேண்டும். கேலி செய்யும் கூட்டம் ஒரு பக்கம் என்றால், பரிதாபப்பட்டு எங்களின் சக்தியை முடக்கும் மனிதர்களும் உண்டு. எங்களை சமமாக மதிக்கவேண்டும். சகமனுஷி என்ற உணர்வு இருந்தாலே போதும். பரிதாபப்படுவதால் என்ன நன்மை?

துன்பப்படும் நங்கைகளுக்கு உதவவேண்டும். ஆனால் இரப்பவர்க்கு அல்ல. வணிகத்தலங்களில் கைதட்டி பிச்சை எடுப்பவர்களின்மேல் எனக்கு கோபம் உண்டு. பலர் பயந்துதான் பணம் கொடுக்கிறார்கள். அவர்களின் அந்த பயமே வெறுப்பாக மாறுவதையும் பார்த்திருக்கிறேன். வேதனைப்பட்டிருக்கிறேன். ஆனால் பிச்சை எடுக்கும் நங்கைகள் சொல்லும் காரணமும் சரியானதுதான். சமூகம் வேலை அளிப்பதில்லை. தள்ளிவைத்து பயத்துடன்தான் பார்க்கிறது. மாற்றங்கள் சமூகத்தில்தான் முதலில் தேவை. பிறகுதான் திருநங்கைகளிடம்.

படித்தவர்களின் கடமைகள் நிறைய உண்டு. எங்களில் படித்தவர்களை பற்றித்தான் சொல்கிறேன். நாங்கள் நல்ல ரோல் மாடல்கள் ஆனால்தான் மாற்றங்கள் பலப்படும்.

எது பெண்மை?


திருநங்கை என்பதாலேயே பூவும், புடவையும் உடுத்தி அச்சம், நாணம், மடம் மற்றும் இன்ன பிற சங்கதிகள் இருக்கவேண்டும் என்று பலர் என்னிடம் சொன்னதுண்டு. ஏன்.. என் உயிர் தோழர்கள்கூட என்னிடம் சொன்னதுண்டு. அதை அப்படியே நான் ஏற்றுக்கொண்டதில்லை. பெண்மை என்பது அடக்கமும், அழகும் அல்ல.

பெண்மை என்பது வல்லமை, ஆற்றல், அறிவு... உடையும், நடையும் வெறும் பாவனைகள். பெண்மை என்பது சிகரம், சுதந்திரம், தூய்மை.

Saturday, March 15, 2008

ஷேக்ஸ்பியர் நாயகியாக நான்..


ஹாம்லெட் ஆங்கில நாடகத்தில் நடித்தது ஒரு இனிய அனுபவம் மட்டும் அல்ல. எனது கலை வாழ்வில் ஒரு அற்புத துவக்கம் என்பேன். முதல் மேடை அனுபவமே ஷேக்ஸ்பியர் அமைவது அதிர்ஷ்டம்தான். ஆரோவில் எனக்களித்த அற்புதங்களில் இந்த நடிப்பனுபவமும் ஒன்று. அதுவும் இரட்டை வேடம்.


ஆரோவில் நாடகக்குழுவின் இயக்குனர் ஜில் அமெரிக்க பெண்மணி. ஆரோவில் வாசியாக பதினைந்து வருடமாக இங்குதான் வசிக்கிறார். மேலே மஞ்சள் உடையில் இருப்பது அவர்தான். திறமையும், அனுபவமும் உள்ளவர். என்மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரிடன் நாடகத்துறை குறித்து நிறைய கற்றுக்கொண்டேன். திருநங்கைகள் பற்றிய தயக்கம் நமது ஊரில் மட்டும் இல்லை, வெள்ளைகாரர்களிடமும் உண்டு. எங்கள் குழுவில் முதலில் சிலரிடம் அந்த தயக்கம் இருந்தது. சில நாட்களிலேயே என்னுடன் பழகியதும் அந்த தயக்கம் நீங்கியது.

ஆறு மாதங்கள் ஒத்திகை பார்த்தோம். ஜனவரியில் மேடை ஏற்றம். அனைவரும் சிறப்பாக செய்தோம். ஆரோவில் சர்வதேச நகரம் என்பதால் இந்த நாடகத்தில் நடித்த அனைவருமே பல நாடுகளைசேர்ந்தவர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ரஷ்யா நாடுகளை சேர்ந்த ஆரோவில்வாசிகள் என் சக நடிகர்கள்.
அடுத்து சிகன்டியின் கதை. இரண்டு வருடம் கழித்து அதை நான் செய்யக்கூடும்.

Friday, March 14, 2008

தமிழ் திருநங்கைகள் நாங்கள்..

இந்த மார்ச் மாதம் மூன்றாம்தேதி வெளியான தி சண்டே இந்தியன் இதழில் மூன்றாவது குரல் என்ற தலைப்பில் சாதித்துக்கொண்டிருக்கும் திரு நங்கையர் பற்றி கவர் ஸ்டோரி எழுதியிருந்தார்கள் . ஆஷா பாரதி , ப்ரியா பாபு , ரோஸ் , அல்கா , லக்ஷ்யா , நர்த்தகி மற்றும் என்னுடைய பேட்டியும் வந்திருந்தது. லிவிங் ஸ்மைலின் கட்டுரை அருமை. அவளை விரைவில் சந்திப்பேன்.

எங்கள் பிரச்சனைகளை மிகவும் தெளிவாக பாரபட்சமின்றி எழுதியிருந்தனர் தோழர் பழனியப்பன் மற்றும் அவரின் குழுவினர். படித்து மகிழ்ந்தேன் . தமிழ்கத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் பெறவேண்டிய உரிமைகள், ஆற்றவேண்டிய கடமைகள் நிறைய உள்ளன. எனது பாதை வேறு. நான் இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் திருநங்கைகள் பற்றி உள்ள தவறான அபிப்ராயங்களை தகர்க்க நினைக்கிறேன். அதற்காக சில திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாக செயல்படுத்துவேன்.

Thursday, March 13, 2008

சகோதரியின் வணக்கம் !

அன்புத்தமிழ் பேசும் அத்துணை பேருக்கும் என் வணக்கங்கள். நான் கல்கி. தமிழ்த்திருநங்கை. இணையத்தில் தமிழில் எழுதும் என் முதல் முயற்சி இது. திருநங்கை என்பதாலேயே பல அனுபவங்கள், மகிழ்வுகள், நெஞ்சை கிழிக்கும் ஏமாற்றங்கள் உண்டு.

ஆனால் அவற்றையும் தாண்டி லட்சியச்சுடரோடு இங்கு வந்திருக்கிறேன். மீண்டும் நாளை சந்திக்கிறேன்.

-கல்கி-