Saturday, March 29, 2008

உறவுகள் முறிவுகள் பிரிவுகள்..

நட்பு. ஒரு தெய்வீகமான உணர்வு. நட்பில் விளையும் நேசம் ஒரு அற்புதம் அல்லவா? அதற்கு ஈடு இணை எது? என் நண்பர்கள் என் உயிரில் கலந்தவர்கள். ஆனால் நான் என்னை நானாக மாற்றிக்கொண்ட பிறகு நான் மிகவும் நேசித்த சிலர் என்னை விட்டு விலக ஆரம்பித்தனர். என் இதயத்தில் அவர்கள் வாளைச்சொருகிய் நிகழ்வுகள் உண்டு. வலிகள் தரககூடிய அந்த நினைவுகள் சில சமயங்களில் என்னை தின்னதொட்ங்கும்.

என் கடமைகளில் முதன்மை


எனது கடமைகள் எங்கே என்பதை நான் தெளிவாக அறிந்துள்ளேன் திருநங்கைகள் மற்றும் பாலினத்தால் மாறுபட்டவர்கள் பற்றிய விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் ஏற்படுவது மிக மிக அவசியம். ஏனெனில் நாளைய தலைவர்கள் அவர்கள்தான். இந்த நாட்டின் சட்டம், அரசியல், கொள்கைகள் இவற்றை நிர்ணயிக்கப்போவது அவர்கள்தான். அவர்கள் நெஞ்சங்களில் உள்ள அறியாமை என்ற நஞ்சை அகற்றி உண்மை என்ற மருந்தை புகட்டுவது என் கடமை. இதில் சவால்கள், அவமானங்கள், இனிய அனுபவங்கள் எல்லாமே நேரக்கூடும் என்பதை நான் நன்றாகவே அறிந்துள்ளேன்.
கல்லூரிகள், பல்கலைகழகங்களுக்கு செல்கிறேன். மேலும் பல கருத்தரங்கங்களுக்கும் செல்வேன். எழுத்துக்களை வாசிக்கும் இளைஞர்கள் எத்தனைபேர் என்று தெரியவில்லை. எனவே நேருக்கு நேர் சந்திப்புகளும், உரையாடல்களும், செமினார்களுமே ஆரம்பத்தில் மாற்றங்களின் அசைவுக்கு உதவும். குறிப்பாக சமூகவியல், சமூகசேவை பற்றிய பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு இந்த விழிப்புணர்வு மிகவும் தேவை.

Monday, March 24, 2008

அனுதாபமும், பரிதாபமும் அவர்களிடமே இருக்கட்டும்..

திருநங்கைகள் மேல் அனுதாபமும், பரிதாபமும் கொள்வது தேவையற்றது என்பது என் கருத்து. எங்களுக்குரிய உரிமைகளை தரவேண்டும். கேலி செய்யும் கூட்டம் ஒரு பக்கம் என்றால், பரிதாபப்பட்டு எங்களின் சக்தியை முடக்கும் மனிதர்களும் உண்டு. எங்களை சமமாக மதிக்கவேண்டும். சகமனுஷி என்ற உணர்வு இருந்தாலே போதும். பரிதாபப்படுவதால் என்ன நன்மை?

துன்பப்படும் நங்கைகளுக்கு உதவவேண்டும். ஆனால் இரப்பவர்க்கு அல்ல. வணிகத்தலங்களில் கைதட்டி பிச்சை எடுப்பவர்களின்மேல் எனக்கு கோபம் உண்டு. பலர் பயந்துதான் பணம் கொடுக்கிறார்கள். அவர்களின் அந்த பயமே வெறுப்பாக மாறுவதையும் பார்த்திருக்கிறேன். வேதனைப்பட்டிருக்கிறேன். ஆனால் பிச்சை எடுக்கும் நங்கைகள் சொல்லும் காரணமும் சரியானதுதான். சமூகம் வேலை அளிப்பதில்லை. தள்ளிவைத்து பயத்துடன்தான் பார்க்கிறது. மாற்றங்கள் சமூகத்தில்தான் முதலில் தேவை. பிறகுதான் திருநங்கைகளிடம்.

படித்தவர்களின் கடமைகள் நிறைய உண்டு. எங்களில் படித்தவர்களை பற்றித்தான் சொல்கிறேன். நாங்கள் நல்ல ரோல் மாடல்கள் ஆனால்தான் மாற்றங்கள் பலப்படும்.

எது பெண்மை?


திருநங்கை என்பதாலேயே பூவும், புடவையும் உடுத்தி அச்சம், நாணம், மடம் மற்றும் இன்ன பிற சங்கதிகள் இருக்கவேண்டும் என்று பலர் என்னிடம் சொன்னதுண்டு. ஏன்.. என் உயிர் தோழர்கள்கூட என்னிடம் சொன்னதுண்டு. அதை அப்படியே நான் ஏற்றுக்கொண்டதில்லை. பெண்மை என்பது அடக்கமும், அழகும் அல்ல.

பெண்மை என்பது வல்லமை, ஆற்றல், அறிவு... உடையும், நடையும் வெறும் பாவனைகள். பெண்மை என்பது சிகரம், சுதந்திரம், தூய்மை.

Saturday, March 15, 2008

ஷேக்ஸ்பியர் நாயகியாக நான்..


ஹாம்லெட் ஆங்கில நாடகத்தில் நடித்தது ஒரு இனிய அனுபவம் மட்டும் அல்ல. எனது கலை வாழ்வில் ஒரு அற்புத துவக்கம் என்பேன். முதல் மேடை அனுபவமே ஷேக்ஸ்பியர் அமைவது அதிர்ஷ்டம்தான். ஆரோவில் எனக்களித்த அற்புதங்களில் இந்த நடிப்பனுபவமும் ஒன்று. அதுவும் இரட்டை வேடம்.


ஆரோவில் நாடகக்குழுவின் இயக்குனர் ஜில் அமெரிக்க பெண்மணி. ஆரோவில் வாசியாக பதினைந்து வருடமாக இங்குதான் வசிக்கிறார். மேலே மஞ்சள் உடையில் இருப்பது அவர்தான். திறமையும், அனுபவமும் உள்ளவர். என்மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரிடன் நாடகத்துறை குறித்து நிறைய கற்றுக்கொண்டேன். திருநங்கைகள் பற்றிய தயக்கம் நமது ஊரில் மட்டும் இல்லை, வெள்ளைகாரர்களிடமும் உண்டு. எங்கள் குழுவில் முதலில் சிலரிடம் அந்த தயக்கம் இருந்தது. சில நாட்களிலேயே என்னுடன் பழகியதும் அந்த தயக்கம் நீங்கியது.

ஆறு மாதங்கள் ஒத்திகை பார்த்தோம். ஜனவரியில் மேடை ஏற்றம். அனைவரும் சிறப்பாக செய்தோம். ஆரோவில் சர்வதேச நகரம் என்பதால் இந்த நாடகத்தில் நடித்த அனைவருமே பல நாடுகளைசேர்ந்தவர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ரஷ்யா நாடுகளை சேர்ந்த ஆரோவில்வாசிகள் என் சக நடிகர்கள்.
அடுத்து சிகன்டியின் கதை. இரண்டு வருடம் கழித்து அதை நான் செய்யக்கூடும்.

Friday, March 14, 2008

தமிழ் திருநங்கைகள் நாங்கள்..

இந்த மார்ச் மாதம் மூன்றாம்தேதி வெளியான தி சண்டே இந்தியன் இதழில் மூன்றாவது குரல் என்ற தலைப்பில் சாதித்துக்கொண்டிருக்கும் திரு நங்கையர் பற்றி கவர் ஸ்டோரி எழுதியிருந்தார்கள் . ஆஷா பாரதி , ப்ரியா பாபு , ரோஸ் , அல்கா , லக்ஷ்யா , நர்த்தகி மற்றும் என்னுடைய பேட்டியும் வந்திருந்தது. லிவிங் ஸ்மைலின் கட்டுரை அருமை. அவளை விரைவில் சந்திப்பேன்.

எங்கள் பிரச்சனைகளை மிகவும் தெளிவாக பாரபட்சமின்றி எழுதியிருந்தனர் தோழர் பழனியப்பன் மற்றும் அவரின் குழுவினர். படித்து மகிழ்ந்தேன் . தமிழ்கத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் பெறவேண்டிய உரிமைகள், ஆற்றவேண்டிய கடமைகள் நிறைய உள்ளன. எனது பாதை வேறு. நான் இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் திருநங்கைகள் பற்றி உள்ள தவறான அபிப்ராயங்களை தகர்க்க நினைக்கிறேன். அதற்காக சில திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாக செயல்படுத்துவேன்.

Thursday, March 13, 2008

சகோதரியின் வணக்கம் !

அன்புத்தமிழ் பேசும் அத்துணை பேருக்கும் என் வணக்கங்கள். நான் கல்கி. தமிழ்த்திருநங்கை. இணையத்தில் தமிழில் எழுதும் என் முதல் முயற்சி இது. திருநங்கை என்பதாலேயே பல அனுபவங்கள், மகிழ்வுகள், நெஞ்சை கிழிக்கும் ஏமாற்றங்கள் உண்டு.

ஆனால் அவற்றையும் தாண்டி லட்சியச்சுடரோடு இங்கு வந்திருக்கிறேன். மீண்டும் நாளை சந்திக்கிறேன்.

-கல்கி-