Thursday, April 24, 2008

புலிகள்... பிரபாகரன்....



தமிழீழ விடுதலை பற்றி எழுதவேண்டும் என்று வெகுநாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழர்கள் அங்கே கொல்லப்படும்போது இங்கேஅமர்ந்து யாகூவில் அரட்டை அடிக்கும் யுவதிகளில் நானும் ஒருத்தி என்று வெட்கத்துடன் கூறிக்கொள்கிறேன். பள்ளிப்பருவத்தில் பிரபாகரனின் புகைப்படத்தை முதன்முதலில் பார்த்தபோது அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்து ஒரு சல்யூட் அடிக்க ஆசைப்பட்டிருக்கிறேன். எனக்கு தெரிந்த ஒரே வீரத்தமிழன் அப்போது அவர்தான். தீவிரவாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. துப்பாக்கி விடுதலை தரும் என்று என்றும் நான் நம்பியதில்லை. அமைதிப்பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு தரும் என்பது எனது கருத்து. எத்தனை ரத்தங்கள, எத்தனை படுகொலைகள்... ஈழத்தில் பெண்களும், குழந்தைகளும் கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்படும் நிகழ்வுகள் கற்பனைக்கெட்டாத சோகங்கள்.




ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது நானும் கோபப்பட்டேன். பிரபாகரன் இந்தியர்களின் முதுகில் குத்திவிட்டார் என்று அப்போது நினைத்தேன். பிரபாகரன் செய்தது சரியா தவறா என்று கேட்டால் ஒரு தமிழச்சி என்பதால் சரி என்பேன். ஒரு இந்தியப்பெண் என்பதால் தவறு என்பேன். தமிழர் எண்ணம் அதுதான்.
பெண் புலிகளை பற்றி நிறைய தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஆயுதம் தொட காரணம் என்ன? அவர்கள் வாழ்வில் நடந்த துயரங்களா அல்லது மண்ணின் மேல் உள்ள பற்றா? பெண்மையின் மென்மை அவர்களிடம் இன்னும் உண்டா? ஒரு திருநங்கையும் ஒரு பெண் புலியும் சந்தித்தால்....

Thursday, April 17, 2008

ரோஸ் கல்கி நட்பு..






ரோஸ் விஜய் டிவியில் 'இப்படிக்கு ரோஸ்' என்ற நிகழ்ச்சியை வழ்ங்குகிறாள். சென்ற வாரம் ஒரு முக்கிய திருநங்கைகள் சந்திப்பில் ரோசும் நானும் சந்தித்தோம். திருநங்கைகளின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் கொண்டுவருவதற்கான சந்திப்பு. பல முக்கிய விஷயங்களை பற்றி விவாதித்தோம். சந்தித்த நிமிடம் முதல் இரண்டு நாட்கள் பிரியவில்லை. பீச், ஷாப்பிங், சும்மா பெப் வண்டியில் ஊர் சுற்றுவது என்று மிக மிக ரசித்தோம் ஒவ்வொரு நிமிடமும்.



இரவுகளில் பெண்கள் சென்னையில் தனியாக பயணிக்க முடியாது என்று அப்போதுதான் அறிந்துகொண்டேன். இரண்டு சக்கர வண்டியில் எங்களால் தனியாக போகமுடியவில்லை. ஆண்களின் கிண்டலும், அழைப்புகளும் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றால் ரோஸ் மிகவும் கோபப்பட்டாள். ஒரு இடத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் எங்களை வெகுதூரம் தொடர்ந்துவந்தது மிகுந்த வேதனையை உண்டாகியது. ரோஸ் அந்த ஆளை அடிக்காத குறைதான். இருவரும் கண்டித்து அனுப்பினோம். . ஆண்கள் இத்தனை வெறியோடு அலைகிறார்கள் என்று நினைக்கும்போது பயமாகத்தான் இருக்கிறது.