Sunday, August 24, 2008

சென்னையில் ஒரு வீடு ...

சென்னைக்கு வந்தபின் என் அலுவலகம் இருக்கும் சைதாபேட்டை பகுதியில் இரண்டு நாட்களாக ரோஸின் ஸ்கூட்டி பெப்பில்அலைந்துகூட வீடு கிடைக்கவில்லை. ஒரு வீட்டில் திருநங்கை என்று தெரிந்ததாலேயே வீடு மறுக்கப்பட்டேன். மனம் வெதும்பி இருந்தவேளையில் ரோஸ் ஆறுதல் சொன்னதுமட்டுமல்லாமல் என்னை உற்சாகப்படுத்தினாள்.

கடைசியாக நேற்று மாலையில் ஒரு இரண்டுமாடி கட்டிட வீட்டில் மொட்டைமாடியில் ஒரு சிறிய வீடு கிடைத்தே விட்டது. கல்கி திரைப்படத்தில் கல்கி தங்கியிருப்பாளே அதுபோல ஒரு வீடுதான்.

வீட்டு உரிமையாளரிடம் நான் திருநங்கை என்று சொல்லவில்லை. அந்த அவசியமும் ஏற்படவில்லை. பின்னொருநாள் அவர்களே கண்டுகொள்வார்கள். அப்போது பார்க்கலாம். அதன்பிறகு பிரியாபாபுவை சந்தித்துவிட்டு ஆட்டோவில் என் அலுவலத்திற்கு வருவதற்குள் அந்த ஆட்டோவை ஓட்டிவந்த இரண்டு பேரில் ஒருவன் கையை நீட்டி என் காலை வருடுவதும் என்னை தடவ முயற்சிப்பதுமாக இருந்தது என்னை அதிர்ச்சியடைய வைத்தது. சட்டென்று என் அலுவலகம் வர இறங்கிக்கொண்டேன். சண்டை போட்டிருக்கலாம். ஆனால் நான் சண்டைபோடவில்லை. மிகப்பெரிய மாற்றங்களுக்கு விதைபோடும் சமயத்தில் இந்தமாதிரி மனிதர்களிடம் என் சக்தியை சிதறடிக்க விரும்பவில்லை.

Friday, August 08, 2008

இனி சென்னைவாசி நான் ..

இந்த மாதம் மூன்றாவது வார இறுதியில் சென்னைக்கு குடி பெயர்ந்துவிடுவேன். என் சொந்த ஊர் பொள்ளாச்சி - நகரமும் கிராமமும் இணைந்த ஒரு கலவை. என் ஊர் அழகின் இலக்கணம் . இந்த ஊரிலிருந்து அங்கு செல்ல எனக்கு சற்றே சற்று தயக்கம் இருந்தாலும் இந்த மாற்றம் அற்புதங்கள் நிகழ்த்தும்.

சென்னையில் நல்ல வீடு கிடைப்பது மிகவும் அரிது என்று எனக்குத்தெரியும். திருநங்கைகளுக்கு மிகமிக அரிது எனவும் எனக்குத்தெரியும். நான் அதிர்ஷ்டக்காரி. சென்னையில் எனக்கு தோழிகள் நல்ல நண்பர்கள் அதிகம். நான் கொடுத்து வைத்தவள். இரண்டே நாட்களில் எனக்கென்று வீடு அமையும்.