Wednesday, October 08, 2008

திருநங்கைகளுக்கு இலவச கல்வி வேண்டும்..

தெருவுக்கு தெரு திருநங்கைகள் பிச்சை கேட்கும் போக்கு மிகவும் அதிகரித்துவிட்டது. நான் சமீபத்தில் சில புத்தக நகல்கள் எடுப்பதற்காக ஒரு கணினி சேவை மையத்திற்கு சென்றிருந்தேன். அழகான ஒரு திருநங்கை அந்த சேவை மையத்திற்கு முன்னால் வந்து நின்று கொண்டார். நானும் ஒரு திருநங்கை என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சேவை மைய உரிமையாளர் பத்து ரூபாய் ஒன்றை அவருக்கு பிச்சை பணமாக கொடுத்தார். அவர் மனம் உவந்து கொடுக்கவில்லை. அந்து திருநங்கை இடத்தை காலி செய்தால் போதும் என்பதுதான் அவர் மனநிலை. இன்று இப்படித்தான் திருநங்கைகளின் நிலை இருக்கிறது.

ஒவ்வொரு கடையிலும் ஆள் மாற்றி ஆள் என குறைந்தது மூன்று திருநங்கைகள் பிச்சை கேட்டு ஒரு நாளில் வருகின்றனர். சில சமயங்களில் கூட்டாக நான்கைந்து பேரும் வருவதுண்டு. கடைக்காரர்கள் பெரும்பாலானவர்கள் மனமுவந்து கொடுப்பதில்லை. என் இவர்கள் பிச்சை எடுக்கின்றனர்? வீட்டு வேலை செய்யலாம்? எத்தனையோ வேலை இருக்கின்றதே என்று பலர் கேட்கின்றனர். அப்படிக்கேட்பவர்களிடம் நான் ஒன்றுதான் கேட்பேன். உங்கள் வீட்டில் வேலைக்காரியாகவாவது ஒரு திருநங்கையை ஏற்றுக்கொள்வீர்களா?

இந்த சமூகம் திருநங்கைகளை ஏற்றுக்கொள்ள இன்னும் தயங்கிகொண்டுதான் இருக்கிறது. வீட்டு வேலைக்காரியாகக்கூட ஏற்றுக்கொள்ளத்தயங்குகின்றனர். எனவேதான் பிச்சை எடுப்பதும் பாலியல் தொழில் செய்வது மட்டுமே திருநங்கைகளால் இயல்கிறது. திருநங்கைகளுக்கு கல்வி முக்கியம். அரசும் அரசு சாரா தனியார் கல்வி நிறுவனங்களும் திருநங்கைகளுக்கு இலவசக்கல்வி வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். கல்வி ஒன்றுதான் அவர்கள் வாழ்வை உயர்த்தும்.