Saturday, December 04, 2010

அரசியலில் பணியாற்றும் முழுத்தகுதியும், திறமையும் எங்களுக்கு உண்டு - திருநங்கை கல்கி

நேர்முகம் - சகா


அரவாணிகளுக்கு குடும்பத்தில், சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன?
முதல் பிரச்சினை மனம், உடல் என்கிறப் போராட்டங்களில் தடுமாற்றம் எங்களுக்குள் பெண்மை வெளிப்படும் பொழுதுக் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. அக்காவுக்கு கல்யாணம் நடக்காது, தங்கச்சிக்கு கல்யாணம் நடக்காது அதுமாதரி நிறைய விஷயங்கள். அதனால் பெரும்பாலானவர்கள் குடும்பத்தைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். அடுத்ததா கிண்டல்கள், கேலிகளுக்கு ஆளாக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகளில் இருந்துத் துரத்தப்படுகிறார்கள். அதனால் மற்ற திருநங்கைகளுடன் இணைந்து, என்ன பண்றாங்கன்னா ஒன்று, பாலியல் தொழில் அல்லது கைதட்டி பிச்சைக் கேட்பது அது இரண்டும் தான் பண்றாங்க.

இந்த நிலைமை எதனால் ஏற்படுது?
இருந்தே திருநங்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது. பாலியல் அடையாளம் என்ற காரணமாக ஒதுக்கி வைப்பது. அரவாணிகளாக இருப்பது குற்றமல்ல, அது ஒருதன்மை. அதைப்பற்றிய பாடங்களும் எந்த பாடத்திட்டத்திலும் இல்லை. அதனால் பட்டம் படிச்சவன், ஆராய்ச்சிப் படிப்பு முடிச்சவன்னாலும் இரண்டாவது தான். படிச்சவனானாலும் திருநங்கைகள் விசயத்தில் ஒரே மாதிரிதான் நடந்துக்குறாங்க. அருவருப்பா பாக்குறது - பாலியல் உறவுகளுக்கு பயன்படுத்து கிறது - கழிப்பிடங்களாக உபயோகப்படுத்துறது.

உங்களுக்கு இது மாதிரியான சங்கடங்கள், துன்பங்கள் நிகழ்ந்தது உண்டா?
வந்து என் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று வரை என் குடும்பத்துடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இப்ப சென்னையில் இருந்தாலும் மாசத்துக்கு ஒருதரம் எங்க ஊருக்குப் போய் எங்க அம்மா, அக்கா, தங்கச்சி கூட இருந்துட்டு வருவேன். எனக்கு நண்பர்களும் நிறைய இருக்காங்க. எனக்கு அந்த மாதிரியான தொந்தரவுகள் பெரிசா எதுவும் இல்லை. அந்த பாதிப்புகள், தொந்தரவுகள் அதிகம் நடந்து கொண்டிருந்தது.

இன்றைய தமிழக அரசு அரவாணிகளுக்கு தனியாக நலவாரியம் அமைத்து கொடுத்திருக்கு. அந்த நலவாரியம் அமைவதற்கு உங்களுக்கு பக்க பலமாக இருந்தார்ன்னு யாரைச் சொல்லுவீங்க?
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிதான். அவங்க அரவாணிகள் மேல ரொம்ப அன்பு கொண்டவங்க, அக்கறை கொண்டவங்க. அவங்களோட முயற்சியாலே அரவாணிகள் நலவாரியம் அமைச்சது மட்டுமல்லாமல் பல விசயங்களுக்கு அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துகிட்டே இருந்தாங்க. அரவாணிகள் உணர்வுகள் மதிக்கப்படனும், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படனும் என்று எங்களுக்காக பல மேடைகளில் குரல் கொடுத்தார் கனிமொழி.

பெரும்பாலான திருநங்கைகளுக்கு பாலின மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு இருப்பது இல்லை, அதற்கு என்ன காரணம்?

காரணமும் இந்த சமூகம் தான். ஏன்னா முறையான கல்விமுறை இல்லை. சரியான தகவல்கள் ஏதுமில்லை. இந்த சமூகம், திருநங்கைகள் இருக்கிறார்கள் என்பதையே அங்கீகரிக்கவில்லை. இவர்கள் கோமாளிகள், பாலியல் சுகத்திற்கு அலைபவர்கள் அப்படிங்கற பார்வைகள்தான் இருந்துட்டு இருக்கு. என்னைப்போன்று படித்த சிலபேர் தேடல்கள் பெரியளவிற்கு விரிவடையும். இணையத்தின் மூலமா சரியான சிகிச்சை, சரியான மாற்றம் அப்படின்னு நாங்க போயிற்றோம். ஆனால் படிக்காத, ஏழை அரவாணிகளெல்லாம் கொஞ்ச, கொஞ்சமாக காசு சேர்த்து என்ன சிகிச்சை செய்ய முடியும், அப்படின்னுதான் பார்ப்பாங்க.

மருத்துவர்கள் அரவாணிகள் பற்றி குறிப்பிடும்போது தங்களைப் பெண்கள் என்று மனதளவில்தான் நினைத்துக் கொள்கிறார்கள். ஹார்மோன் மூலம் பெண்ணாக மாறுவதற்கு வாய்ப்பில்லைன்னு சொல்றாங்க இது சரியானது தானா?
கூற்றை திருநங்கை மருத்துவர் சொல்லியிருந்தா நான் ஏற்றுக்கொள்வேன். இதுவந்து மனக்குறைபாடுங்கற மாதிரியான கருத்துத்தான் அவர்களது கூற்று. ஆனா அப்படியல்ல. புராண காலத்தோடு இந்து இதிகாசங்கள் எல்லாவற்றிலும் ஆண்கள், பெண்கள், அரவாணிகள் என்ற மூன்று பேரும் இருந்திருக்கிறார்கள். மகாபாரதத்துல அர்ஜூனன் ஒருஆண்டு காலம் அரவாணியாக வாழ்ந்ததா கதையும் உண்டு. சிகண்டிங்கற ஒரு அரவாணி வந்து பீஷ்மரை கொல்ற ஒரு பாத்திரமும் அந்த கதையில் உண்டு. இவர்களுக்கெல்லாம் மனநோயா? ஆக மருத்துவர்கள் வந்து இதுமாதிரி தவறான கருத்து வெச்சிருக்காங்க, இப்படி சொல்ற மருத்துவர்கள் யாரும் எங்களைப் போன்றவர்களுக்கு முறையான சிகிச்சை செய்யும்படி எந்தக்கோரிக்கையும் வச்சதில்லையே. எல்லா மேலைநாடுகளிலும் உள்ள மருத்துவர்களும் இது ஒரு மனநோயல்ல என்று நிரூபித்து விட்டார்கள்.

அரவாணியா இருக்கறதால சமூகத்துல வேறுபட்ட பார்வை இருக்கு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீடு வாடகைக்கு கிடைக்கிற துங்கறது பெரிய சிக்கலா இருக்கும். அதை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?
பார்த்தீங்கன்னா நெறைய இருக்கு. ஒரு பக்கம் வந்து வேலைக்கு போகும்போதும் முழு பெண்ணாக அறுவை பண்ணிக்கிட்டாலும் நிறையப் பேருக்கு பொருளாதார வசதி இல்லாததால முகமாற்றம், உடல்ரீதியான மாற்றத்திற்கான மருந்துகள் உட்கொண்டு முழுப்பெண்ணாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும். அதனால் சிலபேர் தோற்றத்தில்  ஆண் தன்மையோடு இருப்பாங்க. அவர்களுக்குத்தான் சமூகத்துல பெரிய சவால்கள் இருக்கு. அவர்களுக்கு எங்கேயும் வேலை கொடுக்கமாட்டார்கள். வேலைக்காரியா செக்கறதுக்குக் கூட யாரும் தயங்குவாங்க. சமூகத்துல எல்லா நிலையிலும் அவங்க தள்ளப்படுறாங்க. வீட்டவிட்டு வெளியே வந்தாலே கிண்டல், கேலி. இப்படி துன்பப்படும்போது சமூகத்திற்கெதிராக கைதட்டி பணம் கேட்பது கொடுக்காதபோது புடவையைத் தூக்கி காட்கிறது அல்லது பலாத்காரமாக பணம் பறிக்க முயற்சிக்கிறதுன்னு பன்றாங்க. இதற்குக் காரணம் சமூகம்தான். எந்த ஒரு சிறுபான்மை சமூகத்தையும் அழுத்தி அழுத்தி வெச்சீங்கன்னா ஒரு கட்டத்துல அது போராட்டமா வெடிக்கும். அரவாணிகள் வந்து என்னடா மரியாதை கொடுக்கறது எடுடா காசு என்கிற மாதிரியான நடவடிக்கைல இறங்கி விடுகிறார்கள். ஆனா இந்த மாதிரி நடந்து கொள்ளும் அரவாணிகள் மாறனும். முக்கியமா சமூகத்தோட பார்வையிலும், நடத்தையிலும் மாற்றங்கள் வேணும்.

அரவாணிகள் பற்றி மாணவர்கள், இளைய தலைமுறையினர் புரிந்து கொள்வதற்கு எந்த அணுகுமுறையைக் கையாள்கிறீர்கள்?
தலைமுறையினர், மாணவர்கள் எங்களைப்பற்றி புரிந்து கொள்வதற்காக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் நான் சென்று உரையாற்றுகின்றேன். இங்கு மட்டுமல்ல, கேரளாவில் உள்ள கல்லூரிகளில் நுழைஞ்சு உரையாற்றுன முதல் அரவாணி நான்தான். கேரளா மாதிரியான ஒரு இடத்தில் அரவாணிகளுக்கு சுத்தமா அங்கீகாரம் கிடையாது. அடி உதை தான் கிடைக்கும். அங்குள்ள அரவாணிகள் ரொம்ப அடிமட்டத்துல இருக்காங்க. ஏன்னா, மதங்கிற ஒரு விஷம் வேரூன்றி இருக்கு. எங்கெல்லாம் மதம்ங்கறது பெரிய விஷயமா இருக்குதோ அங்கெல்லாம் அடக்குமுறை இருக்கும். அது வந்து அரவாணிகளுக்கு ஒரு பெரிய பிரச்சினையா இருக்கு. அதனால, அங்குள்ள கல்லூரிகளுக்கு சென்று உரையாற்றி நல்ல மாற்றத்திற்கான விதையை அங்கு விதைச்சிருக்கேன்.

சமூகத்தில் எந்த மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்?
அரசும் செய்யாத ஒன்றை இப்ப இருக்கிற அரசு எங்களுக்கு நலவாரியம் அமைச்சு கொடுத்திருக்குது, அடுத்ததா அரசு கல்லூரிகள்ல ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினமான திருநங்கைகளை சேர்த்திருக்காங்க. இதுவந்து, கோ எஜிகேஷன் கல்லூரிகளில் மட்டும் இந்த அங்கீகாரம் இருக்கும்ன்னு அறிவிச்சிருக்காங்க. மூன்றாவதா திருநங்கைகளுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா எல்லாம் குடுக்குறாங்க. வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, எல்லாம் கொடுத்திட்டு இருக்காங்க. இன்னும் பாத்தீங்கன்னா அரவாணிகள் எத்தனைபேர் இருக்காங்கன்னு கணக்கெடுத்துட்டு இருக்காங்க. இத அடிப்படையா வெச்சு இன்னும் பல விசயங்களை எங்களுக்காக தமிழக அரசு செய்ய இருக்கு. அடுத்துவர அரசுகளும் அதைத்தொடர்ந்து செய்யும். தமிழ்நாட்டுல அரவாணிகளுக்காக அரசு உதவ தயாராக இருக்கு. எங்களுக்கு குரல் கொடுக்க அரசியல் தலைவர்களும் தயாரா இருங்காங்க. நாங்கள் எதிர்பார்க்கறது எல்லாம் மக்கள் மனமாற்றம் தான். அரசியல் தலைவர்கள் எல்லோரும் வந்து அரவாணிகளுக்கு ஆதரவாகத்தான் இருக்காங்க. மக்கள் மனதில், ஒருவரின் உடல் அமைப்பு, உருவஅமைப்பு, பாலின அமைப்பை வைத்து எடைபோடுவது என்ற தவறான அணுகுமுறை மாற வேண்டும். அரவாணிகளும் மனிதர்கள் தான் என்கிற உணர்வு வரவேண்டும்.

உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றுதான் நீங்கள் காதல், திருமணம் போன்ற உறவுகளை எப்படி எதிர் நோக்கியிருக்கிறீர்கள்?
பாதுகாப்பற்றதாக எல்லா திருநங்கைகளுக்கும் இருக்கு. எல்லா உறவுகளையும் தூக்கிப் போட்டுவிட்டு வந்துவிடும் எல்லா அரவாணிகளுக்கும் ஆசை இருக்கும். தனக்கென்று ஒரு துணை வேணும் என்றும், தனக்கென்று காதலன், தனக்கென்று கணவன் இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனா திருநங்கை வாழ்க்கை சோகம் என்னவென்றால் எந்த ஒரு ஆணும் நிரந்தரமா திருநங்கையோடு இருக்கமாட்டான். நிறையத் திருநங்கைகள் ஆண்களால் ஏமாற்றப்பட்டு, துன்புறுத்தப் பட்டு இருப்பார்கள்.

ஆண்கள் வந்து அரவாணிகளிடம் பழகுவது பணத்திற்காகவும், பாலியலுக்காவும் மட்டுமே. தனக்கு ஆண் துணை வேண்டும் என்பதற்காக அவன் என்ன சொன்னாலும் எப்படி துன்புறுத்தினாலும் பொறுத்துக் கொள்கிறார்கள். ஆண்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு எல்லாவற்றையும் பிடுங்கிக் கொள்கிறார்கள். ஆக, காதல் என்பது அரவாணிகள் வாழ்க்கையில் அப்பப்போ வந்துவிட்டுதான் போகும். நிரந்தரமாக இருக்காது. இது எல்லா அரவாணிகளுக்கும் பொருந்தும்.

உறவுகளினால் ஏற்படும் இதுபோன்ற ஏமாற்றங்களை எப்படி தாங்கிக் கொள்கிறீர்கள்?
ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்வது ஒரு கஷ்டமான விசயம். பெரிய போராட்டமாக இருக்கும். பலர் நொந்து தற் கொலைப் பண்ணிக்கொள்வார்கள். சிலர் எதிரா திரும்பிவிடுவார்கள். ஏமாற்றிய ஆணை பழிவாங்க எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அவமானப்படுத்தி விடுவார்கள். இன்னும் பலர் மனதுக்குள் குமுறிக் கொண்டு போதைப் பழக்கத்துக்கு, அதாவது குடி, பாக்கு போன்றவற்றை பயன்படுத்தித் துன்பத்தை மறக்க அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள்.

ஜாதிக்கொடுமை, பெண்ணடிமை மூன்றாவதாக அரவாணிகள் ஒடுக்குமுறை இந்த மூன்றையும் செய்யும் ஆண் சமூகத்தின் மீது உங்கள் மனநிலை என்ன?
ஆணாதிக்கம் அப்டிங்கற விசயம் பெண் சமூகத்தையே அடக்கி வெச்சி ருக்குது. பெண்களை அடக்கும்போது அரவாணிகளை அடக்கு வது என்பது அதன் தொடர்ச்சி தான். இதற்கு மதங்கள் மிகப்பெரிய காரணம் தான். ஜாதிகள் பிரிப்பு, பாலின ஒடுக்குமுறை இதெல்லாம் அதற்குள் அடங்கிவிடுகிறது. ஆனா, அரவாணிகள் எல்லாம் இதற்குள் சிக்கவில்லை. நாங்கள் அரவாணிகளாக மாறிய உடனே எங்க ஜாதியெல்லாம் தூக்கிப்போட்டுவிடுகிறோம். அரவாணிகளாகிய நாங்களெல்லாம் ஒரே குடும்பமாக இருக்கிறோம். என்னுடைய குரு பிறப்பில் முஸ்லிம், நான் இந்து இருந்தாலும் அவர்தான் என்னுடைய தாய். ஆக ஜாதி மதமெல்லாம் எங்களுக்கு கிடையாது. மற்றபடி பெண்ணுக்கு ஏற்படுகிற அனைத்த அடக்குமுறைகளும் எங்களுக்கும் உண்டு. நீ பெண் மாதிரி இருக்கிறியா அதனால உன்னை அடக்குறேன் என்று ஆண் சமூகம் கேவலமாக நடந்து கொள்கிறது.

அரவாணிகளில் குறிப்பிட்ட விழுக்காட்டினர் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இப்ப கேள்வி என்னன்னா உயிர் கொல்லி நோய் அதாவது எச்ஐ.வி, எய்ட்ஸ் இவர்களால்தான் பரப்பப்படுவதாக சமூகத்தில் கட்டமைப்பு நடந்து கொண்டு இருக்கே?
தன்னுடைய உடம்பில் எச்ஐவி கிருமிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றும் நடத்தல. ஒரு அரவாணிக்கு எய்ட்ஸ் வருதுன்னா அவங்ககிட்ட உறவு வைத்துக் கொள்கிற ஒரு ஆண் மூலமாகத்தான் வருது. அரவாணிகள் பாலியல் தொழில் செய்வது உடல் சுகத்திற்காக அல்ல, வயிற்றுப் பசிக்காக. எல்லா ஆண்கள் கிட்டேயும் காண்டம் போட்டுட்டு உறவு வெச்சுக்கங்கன்னு சொல்ல முடியாது. பல ஆண்கள் ரொம்ப முரட்டுத்தனமா இருப்பாங்க. அப்படி இருக்கறப்போ இந்தமாதிரி நோய் பரவுவதற்கு ஆண்கள்தான் காரணம்.

அரவாணிகள் அரசியலில் பங்கெடுப்பது குறித்து நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
என்னைப் பொறுத்தவரை திருநங்கைகள்தான் அரசியலுக்கு, பொறுப்புகளுக்கு மிக மிக தகுதியானவர்கள் என்று சொல்வேன். அதற்கு காரணம் சமூகத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்டது அரவாணிகள்தான், ஆணா இருந்து பெண்ணா மாறியதால் ஆணுக்கு என்ன பிரச்சினை பெண்ணுக்கு என்ன பிரச்சினை என்று தெரியும். அடுத்த காரணம் சொத்து சேர்த்து வைக்கலாம் என்கிற தேவை யெல்லாம் திருநங்கைகளுக்கு இல்லை. நாங்க அடிப்பட்டு வந்ததால் தைரியம் இருக்கு. அரசியலுக்கு தேவையான துணிச்சல், நேர்மை எங்களிடம் நிறையவே இருக்கு. அடுத்து வர தேர்தல்களில் நிறைய அரவாணிகள் போட்டியிடுவோம். அந்த சூழ்நிலை உருவாகி வருகிறது.

உங்களுக்காக மட்டுமேப் போராடிக்கொண்டு இருந்த நீங்கள் அதிரடி யாக ஈழத்தமிழர்களுக்காக உண்ணாநிலை ஒப்பாரி போராட்டம் நடத்தினீர்கள். அதற்கு என்ன காரணம்?
எங்களுடையப் பிரச்சினைகள் ஒரு புறம் இருந்தாலும், சமூகத்துல என்ன நடக்குதுன்னு பார்த்துகிட்டேதான் இருக்கிறோம். ஈழத்தமிழர் பிரச்சினையில் கடந்த இருபது ஆண்டுகளாக எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், எத்தனை பெண்கள் வன்கொடுமைக்கு ஆளானார்கள் என்பதை எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டு வந்திருக்கிறோம். போர் தீவிரமடைந்து பல பேர் மரணமடைந்தார்கள். அது எங்க எல்லாரையும் வேதனைப் படுத்துச்சு. தங்கள் குடும்பத்தை இழந்து, தன் சகோதரிகள், தாய் போன்றோரை இழந்து தன்னந்தனியாக தன்நாட்டை விட்டு எலிகளாக வரும் கொடுமை எங்களுக்கானதாக இருக்கிறது. ஏன்னா, நாங்க அரவாணிகள் என்றக் காரணத்திற் காகவே குடும்பத்தைவிட்டு வெளியே வந்து விடுகிறோம். அல்லது துரத்தப்படு கிறோம். ஆக சொந்த நாட்டிலேயே புலம் பெயர்ந்து வாழும் வேதனை எங்களுக்கு இருக்கிறது. அதுபோலவே ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளையும் எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆகவே தான் அந்தப் போராட்டத்தை நடத்தினோம். ஈழத் தமிழர்களுக்கான எங்கள் ஆதரவைத் தெரிவிக்கவே நாங்கள் போராட்டத்தை நடத்தினோம். சகமனிதர்கள், தமிழர்கள் என்பதற்காக முதன்முறையாகக் குரல் கொடுத்ததற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். அதுபோல ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தால்தான் சமூகத்தால் நாங்களும் அங்கீகரிக்கப்படுவோம்.

அரவாணிகள் என்பவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் தான் என்று கருத்து நிலவுகிறதே, அது உண்மையா?
முழுக்க முழுக்க தவறான கருத்து. சில கருத்துக்கள் வதந்திகளாய் பரவுகிறது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும், அரவாணிகளுக்கும் நிறைய வேறுபாடு இருக்கு. ஓரினச் சேர்க்கையாளர்கள் அதாவது ஹோமோ செக்ஸ் வைத்து கொள்பவர்களுக்கு உடல் ரீதியான தொந்தரவுகள் எதுவும் இருப்பதில்லை. தங்களை ஆண்களாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனா அரவாணிகளுக்கு தான் யார்? என்பதே முதல் பிரச்சினை. இரண்டாவதா தான் யாரால் ஈர்க்கப்படுகிறோம் என்கிறப் பாலியல் பிரச்சினை.

ஆக அரவாணியை பொறுத்தவரை பாலியல் உணர்வு என்பது இரண்டாம் பட்சம்தான். முதலாவது தான் ஆணா, பெண்ணா என்பதுதான். ஒரு அரவாணி யைப் பொறுத்தவரை துணையில்லாமல் பாலியல் ஈர்ப்பில்லாமல் இருந்து விடுவார். ஒரு ஆண் துணையில்லாமல் அவளால் இருக்கமுடியும். ஆனால் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் காதல் என்று வருவதைத் தவறென்று நாம் கருத முடியாது. ஏன்னா அது அவங்களுடைய தனிப்பட்ட விசயம். மற்றவர் படுக்கை அறையை நாம் எட்டிப்பார்க்கக் கூடாது