Monday, March 22, 2010

நான் கல்கி ஆனது எப்படி?


தன்னை உணர்ந்து நிரூபித்து, இந்தச் சமூகத்தின் பார்வையைத் திருத்தியவரின் கதை...
''நாங்கள் தேவதைகள் இல்லை. பிசாசுகளும் இல்லை. உங்கள் எல்லோரையும்போல இதயமும் இரைப்பையும் உள்ள மனிதர்கள். பசி, தூக்கம், கனவு, காதல், காமம், திறமை, தேடல், உழைப்பு, கருணை, காயம், கோபம், துக்கம், பெருமிதம் எல்லாம் எங்களுக்கும் உண்டு. நாங்களும் ஓர் அம்மாவின் வயிற்றில் இருந்துதான் பிறந்தோம், உங்களைப்போலவே!'' - செறிவான சொற்களில், திருத்தமான தமிழில் பேசுகிறார் கல்கி.

இந்தியத் திருநங்கைகளின் வாழ்க்கை மிகத் துயரமானது. அவமானங்களையும், ஏளனங்களையும், புறக்கணிப்புகளையுமே எதிர்கொள்ளும் திருநங்கைகள் சமூகத்தில் இருந்து மாற்றத்தை நோக்கிச் செயல்படும் ஒருவர்... கல்கி.

''நான் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். சர்வதேச உறவுகள் படிப்பில் இன்னொரு முதுகலைப் பட்டம் வாங்கியிருக்கிறேன். மேற்கொண்டும் படிப்பேன். இவை அனைத்தும் இவ்வுலகில் ஒடுக்கப்பட்டவர்களாக வாழ நிர்ப்பந்திக்கப்படும் திருநங்கைகள் மற்றும் ஒருபால் ஈர்ப்புக்கொண்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்காகவே.

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்றல் வீசும் அழகான பொள்ளாச்சி,நான் பிறந்த ஊர். வசதியான குடும்பத்தில் பிறந்ததால் கான்வென்ட் படிப்பு. அப்பா, தி.மு.க-வில் தீவிரமாக இருந்ததால் தமிழ் மீதான பற்று அதிகம். கலைஞர் எங்கள் ஊருக்குப் பேச வரும்போது அப்பா என்னையும் மேடையில் ஏற்றிவிடுவார். ஏழு வயதிலேயே தி.மு.க-வின் பிரசார ஜீப்களில் அப்பாவோடு சுற்றியிருக்கிறேன். போராட்டங்களில் பங்கேற்று இருக்கிறேன். அறிந்தோ, அறியாமலோ போராட்டம் என்பது சிறு வயதில் இருந்தே பழகி விட்டது.

எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் முதல் மார்க் நானே. இதெல்லாம் படிப்பு சார்ந் தவை. இதனால் எல்லாம் என் உடல் மாற்றங்களை மறைக்க முடியவில்லை. நானே குழம்பி நின்ற வேளையில்தான் சக மாணவர்களால் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டேன். பள்ளியில் கிண்டலாக இருந்தது, கல்லூரியில் சீண்டலாக மாறியது. துன்பங்களையும் துயரங்களையுமே நண்பர்கள் பரிசளிக்க, நான் புத்தகங்களின் மடிக்குள் பதுங்கிக்கொண்டேன். பெரியார், அண்ணா, லெனின், பகுத்தறிவு, ஒடுக்கப் பட்டவர்களின் வாழ்க்கை என மேலும் மேலும் படித்தேன். புத்தகங்கள் மட்டுமே அனைத்துக்குமான வடிகாலாக இருந்தன.

என் தாய் - தந்தை சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். என் தாய் நிறையத் துன்பங்களைச் சந்தித்தார். சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தாலும் துன்பங்களை எதிர்த்துப்போராட அவர் தயங்கியது இல்லை. என் அம்மாதான் எனக்கு ரோல் மாடல். நான் ஒரு திருநங்கை எனத் தெரிந்தும் ஆதரவோடு அரவணைத்துக்கொண்டவர் அம்மா. ஆனால், என்னைச் சுற்றிய மற்ற திருநங்கைகளின் வாழ்வு அவலத்திலும் அவலமாக இருப்பதைக் கண்டேன். வெளிச்சத்தில் கேலி கிண்டல், இருட்டில் பாலியல் கொடுமைகள். இவற்றை எதிர்த்துப் போராட இயலாத அளவுக்கு வறுமையும், கல்வியறிவு இல்லாமையும் அவர்களை வாட்டியது. 'பொருளாதாரப் பிரச்னைகள் இல்லாத, குடும்பத்தின் ஆதரவுக்குள் வாழும் நாம் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும்' என நினைத்து முழுக்க முழுக்க திருநங்கைகளுக்காகவே 'சகோதரி' என்ற இதழைத் தொடங்கினேன்.

படித்துக்கொண்டே ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலைசெய்து எனது சுய சம்பாத்தியத்தில் முதல் பால்மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். ஓயாத தேடல் என்னை ஆரோவில் சர்வதேச நகரத்துக்கு இடம் பெயரவைத்தது. அபூர்வ இசைக் கருவிகள் தயாரிக்கும் கிராமத்து இளைஞர்கள் எட்டுப் பேருடன் சேர்ந்து காடுகள், மலைகள் என இசை ஆராய்ச்சிக்காக எங்கெல்லாமோ சுற்றினேன். என்னை ஓர் இனிய தோழியாக நடத்திய அவர்களின் இசை அறிவை உலகம் அறிந்துகொள்ள, ஓர் இணையதளம் தொடங்கினேன். இன்று அவர்கள் வெற்றியாளர்கள். அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பது மனநிறைவைத் தருகிறது. திருநங்கைகளின் வாழ்வுரிமைபற்றிப் பேசப் பல மாநிலங்களுக்குச் சுற்றியிருக்கிறேன். ஆயிரக்கணக்கான கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன். திருநங்கைகள் மட்டுமின்றி, மாற்றுப்பாலின அடையாளம்கொண்டவர்கள், தன்பால் விழைவுகொண்டவர்களின் உரிமைக்காகவும் பேசுகிறேன். இதுகுறித்து ஊடகங்களுக்கான கருத்தரங்குகள், ஆவணப் படங்கள் எனத் தொடரும் பயணத்தில் என் சக திருநங்கைகள் பலர் என்னுடன் கைகோத்துள்ளனர்.

திருநங்கைகள் பாலியல் தொழில் செய்யவும், பிச்சை எடுக்கவும் பிரதான காரணம் வறுமைதான். பெற்றோர்கள் கைவிடுகிறார்கள், ஊர் கிண்டல் செய்கிறது, சமூகம் வேலை தருவது இல்லை. பிறகு, அவர்கள் வாழ்வதற்கு என்ன வழி? பொருளாதார முன்னேற்றம்தான் மாற்றத்தின் முதல்படி. அதனால்தான் 'பட்டாம் பூச்சிகள் திட்டம்' என்ற பெயரில் அழகு ஆபரண நகைகள் தயாரிக்கும் சுயதொழில் திட்டத்தைத் திருநங்கைகளுக்குப் பயிற்றுவித்தோம். தமிழக அரசு 1.5 லட்ச ரூபாய் மானியம் வழங்கியது. திருநங்கைகள் அபரிமிதமான கலை ஆற்றல் மிக்கவர்கள். அதை உலகறியச் செய்வதற்காக 'விடுதலை கலைக் குழு' என்ற குழுவைத் தொடங்கிஇருக்கிறேன். ஆர்வமும் உழைப்பும்மிக்க 25 திருநங்கைகளுக்கு தமிழ்நாட்டு நடனம், ஆப்பிரிக்க, தென் அமெரிக்கப் பழங்குடி மக்களின் இசையையும் கற்பிக்கிறோம். வெகு விரைவில் தனித்துவம் மிக்க இசைக் கலைஞர்களாக அவர்கள் பரிணமிப் பார்கள்.

எல்லாவற்றையும்விட முக்கியமானது www.thirunangai.net என நான் தொடங்கிய இணையதளம். பாலியல் சுரண்டலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் திருநங்கைகளை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்க விரும்பும் ஆண்களைக் கண்டறிவதே இதன் நோக்கம். திருநங்கைகளுக்கான உலகின் முதல் மேட்ரிமோனியல் வெப்சைட்டும்கூட. ஆறு திருநங்கைகளின் வரன்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வெப்சைட்டைப் பார்த்து, இப்போது உலகம் முழுவதும் இருந்து 600-க்கும் அதிகமான ஆண்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். 'உலகம் மாறிக்கொண்டு இருக்கிறது' என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

விரைவில், இந்தியா முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடக்கப்போகிறது. இதில் திருநங்கைகளின் எண்ணிக்கை தனியாகக் கணக்கெடுக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இடப்பங்கீடு, தேர்தலில் போட்டியிடும் உரிமை, சொத்துரிமை, திருமணம் மற்றும் குழந்தை தத்தெடுப்பு உரிமை போன்றவை வழங்கப்பட வேண்டும். என் நோக்கமும் செயல்பாடும் இப்போது இதை நோக்கித்தான் இருக்கிறது!''

*
மூலம் : ஆனந்த விகடன்