Tuesday, March 15, 2011

மேல்சபையில் திருநங்கைகளுக்கு இடம்: "சகோதரி' அமைப்பு வேண்டுகோள்




செப்டம்பர் 23,2010,23:30 IST


சென்னை : ""தமிழக மேல் சபையில் திருநங்கைகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்,'' என்று திருநங்கைகளின், "சகோதரி' அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை கல்கி சுப்ரமணியம் சமூக சேவையில் ஆர்வத்துடன் செயல்பட்டதால், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று 14 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்கிறார்.

பயணம் குறித்து சென்னையில் நேற்று நிருபர்கள் சந்திப்பில் கல்கி சுப்ரமணியம் கூறியதாவது:திருநங்கைளின் சமூக, பொருளாதார மேம்பாட்டு சேவைக்காக எட்டு வருடங்களாக பணியாற்றி வருகிறேன். "சகோதரி' என்ற அமைப்பை நிறுவி, இதன் மூலம் திருநங்கைகளுக்கு சட்ட ரீதியாக சமூக பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்து வருகிறேன். மனித உரிமை தொடர்பான சேவையும் செய்து வருகிறேன்.இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சமூக சேவை, சினிமா, அரசியல் போன்றவற்றில் சிறப்பாக சேவை செய்யும் ஒருவரை அமெரிக்க அரசு சுற்றுப் பயணத்துக்கு அழைப்பது வழக்கம்.இந்த வருடம் இந்திய பிரதிநிதியாக அமெரிக்க அரசு என்னை அழைத்துள்ளது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.

வரும் அக்டோபர் 1ம் தேதி அமெரிக்கா செல்கிறேன். அங்கு வாஷிங்டன், சாலட் லேக் சிட்டி மற்றும் நியூயார்க்கில் சுற்றுப்பயணம் செய்கிறேன்.அமெரிக்காவில் திருநங்கைகளின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்றும் அரசின் செயல்பாடுகளையும், மனித உரிமை செயல்பாடுகள், குழந்தைகள் மேம்பாடு பற்றியும் அறிந்து கொள்ள இப்பயணம் எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. சுற்றுப்பயணம் முடித்து அக்டோபர் 17ம் தேதி சென்னை திரும்புகிறேன்.இங்கு திருநங்கைகள் பாலியல் தொந்தரவாலும், குடும்பத்தினராலும் மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர்; பலர் பிச்சைக்காரர்களாக உள்ளனர். இந்நிலை மாற, திருநங்கைகளின் நலம் காக்க நிறைய உழைப்பேன். தமிழகத்தில் மேல் சபை அமைக்கப்படுகிறது. இதில், திருநங்கைகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என,"சகோதரி' அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கல்கி சுப்ரமணியம் கூறினார்.

No comments: