Saturday, July 09, 2011

இருவர்!

கட்டியக்காரி கலைஞர்களின் கடும் உழைப்பில், உழைப்பின் வியர்வையில் பிறந்த உன்னதமான படைப்பு ‘மொளகாப்பொடி’. அவர்கள் அத்தனைபேருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில் இந்நாடகத்தில் வெற்றியில் நான் இன்புற்று கர்வம்கொள்ள இரண்டு மிகப்பெரிய தனிப்பட்ட காரணங்கள் உண்டு. முதலாவது காரணம் பெரும் வெற்றிப்படைப்பான ‘மெளகாப்பொடி’ என் ‚ஜித்தின் நெறியாள்கையில் அரங்கேறியது. இரண்டாவது காரணம் நாடகத்துறையில் நடிகையாக அவதரித்துள்ள என் தாயம்மாவின் ஆர்ப்பரிப்பான மேடை அரங்கேற்றம்.

இருவருக்கும் எனக்குமான தொடர்பு எல்லையற்ற தாயன்பைப்போன்றது. இவர்கள் இருவரும் எனக்கு உயிர்கொடுத்தவர்கள். என்னுடைய பாலின மாற்று அறுவை சிகிச்சையின் இரண்டாவதாக நடந்த பெரிய சிகிச்சையில் என்னோடு இரவும், பகலும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டது இந்த இருவரும்தான். எனக்கென்று உறவுகள் சென்னையில் யாருமில்லாமல் தனியாக மருத்துவமனை படுக்கையில் நான் சாய்ந்தபோது என்னை பார்த்துக்கொண்டது ‚ஜித்தும், தாயம்மாவும்தான். ஒருவகையில் அவர்களின் குழந்தை நான். எனக்கு இரண்டாவது பிறவி கொடுத்ததும், என் உயிரைக்காத்ததும் இவர்கள்தான். இவர்கள் இருவரும் என்னுடைய இன்னும் இரண்டு தாய்கள் என்பதில் எனக்கு கர்வம், பெருமை.

கடந்த இரண்டுவருடங்களாக நாங்கள் அதிகம் சந்திப்பதில்லை. காரணம் சமூகத்திற்கான எங்கள் வழியில் நாங்கள் ஆற்றும் கடமைகளும், எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ச்சியாக சந்திக்கின்ற மாற்றங்களும், மனிதர்களும்தான். ஆனால் இவை எல்லாம் எங்களின் அன்பான உறவுக்கு தடையாக இருந்ததே இல்லை. எனக்கான ‚ஜித்தையும், எனக்கே எனக்காக தாயம்மாவையும் நான் இழக்கவில்லை. கால ஓட்டத்தின் மாறுதல்கள் புதிய பாதைகளை வகுத்தாலும் தடையற்ற, எங்களின் பிரதிபலன் எதிர்பார்க்காத தூய அன்பு ஒன்று மட்டும்தான் எங்களை எப்போதும் இணைத்துகொண்டிருக்கிறது.

‚ஜித்திற்கும், எனக்குமான நட்பை காதல் என்றும், பாசம் என்றும் யூகித்தவர்கள் எத்தனையோ பேர். நான் சென்னை வந்ததிலிருந்து என்னுடைய பணிகளுக்கு தோள்கொடுத்து உற்சாகப்படுத்தியது நட்பின் அடிப்படையில். ஆனால் எங்கள் உறவு என்பது தூய அன்பின் நிரந்தர அடையாளம். ஒரு விவரிக்க இயலாத ஒரு பந்தமாக எங்களுக்குள் இயல்பாக ஏற்பட்டது அது. எங்கள் இருவரின் வாழ்வில் பலர் இருந்தாலும் எங்கள் உலகம் வேறு. அது இரண்டு குழந்தைகளினுடையது. ‚ஜித்தின் படைப்பு உலகம் பேசப்பட உயர ஆரம்பித்ததில் சத்தமில்லாமல் இறுமாப்புக்கொள்கிறேன். தங்கக்கட்டியான என் தாயம்மாவையும் அழகான கிரீடமாக மாற்றிவிட்டானே ‚ஜித். எனது அன்பிற்குரிய இந்த இரண்டு பேரும் இணைந்த அனல் பறக்கும் இந்த ‘மொளகாப்பொடி’ என் நெஞ்சில் தேனை வார்த்த தித்திப்பு குடம்!