Sunday, August 05, 2012

திருந‌ர் குழந்தைகள் ஆண், பெண்ணுக்குரிய இரு பால் உறுப்புகளும் சேர்ந்த நிலையில் பிறப்பவர்கள், இரண்டு உறுப்போடு தோன்றி, அவை வளராத நிலையில் இருப்பவர்கள், ஒரு உறுப்புகூட இல்லாமல் பிறப்பவர்கள் இவர்கள் அனைவரும் திருந‌ர்களாக கருதப்படுகின்றனர். இவர்களில் அரவாணிகள் என்றழைக்கப்படும் திருநங்கைகளும் அடங்குவர். ஆனால் பெரும்பாலான திருநங்கைகள் ஆணுக்குரிய அனைத்து உடல் அமைப்புகளையும் கொண்டு, ஆணாகத்தான் பிறக்கிறார்கள். ஆண் உடலுடன் பெண்ணின் மனம், செயல், குணாதிசயம் போன்றவை அவர்களிடம் இருக்கும். அதுபோலவே பெண்ணுக்குரிய அனைத்து உடல் அமைப்புகளையும் கொண்டு, பெண்ணாக பிறந்தாலும் ஆணின் மனம், செயல், குணாதிசயம் போன்றவை உள்ளவர்களை திருநம்பிகள் என அழைக்கிறோம்.

பெற்றோர் ஆண் குழந்தைக்கு பூச்சூடி, பொட்டு வைத்து, பெண் குழந்தைபோல் உடையையும் அணிந்து வளர்த்து வந்தால் அது காலப்போக்கில் பெண்தன்மை கொண்டு திருநங்கை ஆகிவிடும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. குழந்தைப் பருவத்தில் ஆண்-பெண் என்ற பாகுபாடு இன்றி குழந்தைகள், குழந்தைகளாக மட்டும்தான் வளர்ந்து கொண்டிருப்பார்கள். அதனால் பத்து வயதுவரை பெண்தன்மை கொண்ட குழந்தைகளை அடையாளம் காண்பது பெற்றோருக்கு சிரமம்தான். பத்து வயதுக்கு மேல் பெண் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவது, அழகுணர்ச்சி அதிகமாகி சிறுமிகள்போல் அழகுப்படுத்திக்கொள்வது, வண்ண வண்ண உடைகள் மீது ஈர்ப்பு கொள்வது, சிறுவர்களிடம் இருந்து விலகிக்கொண்டிருப்பது போன்றவை பெண்தன்மை கொண்ட ஆண்குழந்தைகளிடம் காணப்படும். பெண்மை குணங்கள் கொண்ட சில ஆண் குழந்தைகளுக்கு தங்களுடைய பாலினம் பற்றிய குழப்பம் இருக்காது. பெண்தன்மை இருந்தாலும் தன் பாலின அடையாளம் ஆண்தான் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

ஆனால் பெண்ணாக தன்னை அடையாளம் காணும் ஆண் குழந்தைக்கு அடுத்தடுத்த வருடங்களில் பேச்சு, நடை, உடல்மொழி போன்றவைகளிலும் பெண் தன்மை அதிகரித்துக்கொண்டிருக்கும். பதினான்கு வயது வாக்கில் ஆண், பெண் இருவருமே பருவமாற்றம் அடைகிறார்கள். பெண் வயதுக்கு வருவதும், ஆணுக்கு விந்து உற்பத்தி தொடங்குவதும் அப்போது நிகழ்கிறது.

ஒரு சிறுவன் திருநங்கையாக இருக்கும் பட்சத்தில் பருவ மாற்றத்தின் போது அவனுக்குள்ளும் சராசரியான ஆணுக்குரிய ஹார்மோன் சுரக்கத் தொடங்கிவிடும். உயிரணு உற்பத்தியும் தொடங்கும். அதே நேரத்தில், அதைவிட வேகமாக பெண்தன்மைக்கான குணாதிசயமும், செயல்பாடும் அவனுக்கும் வளரும். இதனால் பருவமாற்றத்தின்போது ஆண், பெண்ணை விட இவர்கள் அதிக மனக்குழப்பத்தை அடைவார்கள். இந்த மனக்குழப்ப அறிகுறியை பெற்றோர் எளிதாக உணர்ந்துகொள்ளலாம்.

இந்த காலகட்டத்தில் அவர்கள் பள்ளியில் படித்துக்கொண்டிந்தால். வீட்டில் அவர்களின் பழக்க வழக்க முரண்பாடுகளை பெற்றோர் புரிந்துகொள்வது போல், பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களில் சிலரும் அந்த முரண்பாட்டை கண்டறிந்து கேலி, கிண்டல் செய்யக்கூடும். சில ஆசிரியர்கள்கூட தண்டனை வழங்குவது மட்டுமின்றி `பாலியல்’ கண்ணோட்டத்தோடும் அணுகக்கூடும். இதனால் கோபம், எரிச்சல் தோன்றி, மன அழுத்தத்தின் உச்சத்திற்கு திருநங்கைகள்  சென்றுவிட வாய்ப்புண்டு. பெற்றோரின் அரவணைப்பும், ஏற்றுக்கொள்ளளும் இத்தருணத்தில் குழந்தைகளுக்கு மிக மிக அவசியம்.

பாலியல் மாறுபாடு கொண்ட குழந்தைகளை பெற்ற பெற்றோர், `குடும்ப கவுரவம், கலாச்சாரம் என்ற பெயரில் உன் உணர்வுகளை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம். யார் உன்னை கொச்சைப்படுத்தினாலும் சும்மா விடமாட்டோம். உனக்கு எங்கே, எப்போது பிரச்சினை ஏற்பட்டாலும் எங்களிடம் சொல்’ என்று தன் குழந்தையை அரவணைக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடமும், சக மாணவர்களிடமும் பேசி யாரும் கேலி, கிண்டல் செய்யாத அளவிற்கு நன்றாகப் படிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். படித்து முடிக்கும்வரை எல்லா திருநங்கைகளுக்குமே பள்ளி, கல்லூரிகளில் பெரும் பிரச்சினையாக இருப்பது `டாய்லெட்’. மாணவர்களுக்கு உரிய டாய்லெட்டையும் பயன்படுத்த முடியாது.

மாணவிகளுக்குரிய டாய்லெட்டையும் பயன்படுத்த முடியாது. இதனால் படிப்பை திருநங்கைகள்  துறக்கிறார்கள். அந்த நிலை ஏற்படாமல் இருக்க பெற்றோரே பள்ளிக்கூட நிர்வாகத்திடம் பேசி, ஆசிரியர்களின் டாய்லெட்டை பயன்படுத்த அனுமதி வாங்கித்தர வேண்டும்.

திருநங்கைகளுக்கு பள்ளிக் காலத்திலே காதல் பிரச்சினை தலைதூக்குகிறது. அதில் அவர்கள் காயமடையாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் பெற்றோருக்கு இருக்கிறது. 15 வயதுகளில் ஆண், பெண்களுக்கு ஏற்படுவது போன்ற இனக்கவர்ச்சி, செக்ஸ் ஈர்ப்பு திருநங்கைகளுக்கும் ஏற்படும். காதல் கொள்வார்கள். பெரும்பாலும் அப்படிப்பட்ட காதலில் விழும்போது ஆண்களால் `உபயோகப்படுத்தப்பட்டு’, காயப்படுத்தப்படுகிறார்கள். அப்போது அவர்களை பெற்றோர் புரிந்துகொண்டு நல்வழிப்படுத்தாவிட்டால், தனக்கு ஆறுதல் தரும் திருநங்கைகள் சமூகத்தை நோக்கி அவர்கள் நகரத் தொடங்கிவிடுவார்கள். அப்போதுதான் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதும், மும்பை போன்ற நகரங்களுக்கு செல்வதும் நிகழ்கிறது.

குடும்பத்தின் அரவணைப்பு கிடைக்காதபோது தங்கள் குடும்ப அந்தஸ்து, பணம், பொருள், ஊர், உறவு அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு அவர்கள் திருநங்கைகள் சமூகத்தோடு இணைந்துவிடுவார்கள். அங்கே அவர்கள் விரும்பியது போல் பெண் உடை அணிந்து கொண்டு, பெண் போல் வாழ வாய்ப்பு கிடைத்தாலும் வாழ்க்கைக்கு தேவையான பணத்துக்காக கடைகேட்டல் அல்லது பாலியல் தொழில் செய்வது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அதைத் தொடர்ந்து தனக்கும் இருக்கும் பெண்மையை முழுமைப்படுத்த விரும்பி, அவர் சார்ந்திருக்கும் திருநங்கை குழுவினர் பயன்படுத்துவதுபோல் ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுதல், ஹார்மோன் ஊசிகளை செலுத்துதல் போன்றவைகளில் இறங்குவார்கள். ஒவ்வொருவர் சொல்லும் ஆலோசனையையும் கேட்டு வெவ்வேறு மாத்திரைகளை சாப்பிடுவதால் அவர்கள் உடல் நிலை வெகுவாக பாதிக்கும்.

இந்த மாதிரியான பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், பெற்றோர் முதலில் தங்கள் திருநங்கைக் குழந்தையை புரிந்துகொள்ள வேண்டும். `என் குழந்தை திருநங்கைதான் என்றாலும், எனக்கு அது குழந்தை. உலகத்திலே எனக்கு அந்த குழந்தைதான் பெரிது. அதை வளர்த்து, ஆளாக்கி உன்னத நிலையை அடைய வைப்பேன்..’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அதில் அவர்களுக்கு தயக்கங்களோ, தடுமாற்றங்களோ இருந்தால் மனநல நிபுணர்களிடம் கவுன்சலிங் பெறவேண்டும்.

10-12 வயதில் ஒரு சிறுவன் தன்னைப் போன்ற சிறுவர்கள் கூட்டத்தோடும், சிறுமி தன்னைப்போன்ற சிறுமிகள் கூட்டத்தோடும் இணைவார்கள். அந்த காலகட்டத்தில் தன்னை திருநங்கையாகப் புரிந்துகொள்கிறவர், தன்னைப் பெண்ணாக உணர்ந்து பெண் பக்கமாக சாய்கிறார். அப்போது குடும்பமும், சமூகமும் அவரைப் பார்த்து `நீ ஆண் அல்லவா.. ஏன் பெண்கள் பக்கள் சாய்கிறாய்?’ என்று கேட்கிறது.

திருநங்கைகள் அதிகம் பெண்களோடு பழகி, பெண்களையே கூர்ந்து கவனிப்பதால், தன்னைவிட மூத்த பெண்கள் மேக்-அப் செய்துகொள்வதும், அணிகலன் அணிவதும், அழகழகாக உடைகள் உடுத்திக்கொள்வதும் அவர்களை ஈர்க்கிறது. அப்போது அவர்களுக்கும் இருக்கும் பெண்மை விழித்து அவர்களையும் அதுபோல் அலங்காரம் செய்துகொள்ளத் தூண்டுகிறது. திருநங்கையின் அந்த உணர்வுகளை பெற்றோரும், குடும்பத்தாரும் அப்போது  புரிந்துகொள்ளவேண்டும்.. வருத்தமாக இருந்தாலும் ஏற்றூக்கொள்ளத்தான் வேண்டும். எல்லா விஷயங்களையும் மனம் திறந்துபேச அனுமதிக்கவேண்டும். அப்படி பேசி, அவர்களுடைய உணர்வுகளை தெரிந்துகொண்டு, தங்களுடனே வைத்து பெற்றோரால் வளர்க்கப்பட்ட சில திருநங்கைகள் இப்போது உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். எக்காரணத்தைக் கொண்டும் திருநங்கையை ஆணாகக் கருதி, அவருக்கு இன்னொரு பெண்ணை திருமணம் செய்துவைத்துவிடக்கூடாது. அது மிகக்கொடுமையான செயல்.

திருநங்கைகளுக்கு இன்று வேலை கிடைப்பதில்லை. காரணம் அவர்களுக்கு முழுமையான கல்வி இல்லை. அந்த கல்வி கிடைக்காததற்கு காரணம் பெற்றோர்கள்  குடும்பத்தைவிட்டு அவர்களை வெளியேற்றிவிடுவதுதான். பெற்றோர் தங்களோடு திருநங்கைகளை வைத்து வளர்த்தால் அவர்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

திருநங்கைகள் பால்மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகுதான் பெண்ணாகி முழுமை பெறுவதாக கருதுகிறார்கள். உறுப்பை நீக்கியவர்தான் உயர்ந்தவர் என்ற கருத்தும் சில திருநங்கைகள் மத்தியில் இருக்கிறது. `என் மனது பெண்மையுடன் இருக்கிறது. அதனால் ஆண் உறுப்பை நீக்காவிட்டாலும் நான் பெண்தான்’ என்று கருதி ஆபரேஷன் எதுவும் செய்துகொள்ளாமல் சந்தோஷமாக வாழும் திருநங்கைகளும் இருக்கிறார்கள்.

திருநங்கைகளுக்கு உள்ள பிரச்னைகளை ஊடகங்கள் வாயிலாக நன்றாக அறிகிறோம். ஆனால் திருநம்பிகள் என்றழைக்கப்படும் பெண் உடலில் வாழுகின்ற ஆண்களின் துன்பம் சொல்லப்படாத சோகம். பெண் உடலுக்கு இழைக்கப்படும் அநீதி இந்த ஆண்களுக்கும் இழைக்கப்படுகிறது. திருநங்கைகள் ஆண் உடலில் அனுபவிக்கின்ற குழப்பங்களையும், துன்பங்களையும் திருநம்பிகள் பெண் உடலில் அனுபவிக்கிறார்கள். திருநம்பியை ஆணுக்கு திருமணம் செய்துவைப்பது மிகவும் துன்பகரமானது. பெற்றோர் இந்த தவறை ஒருக்காலும் செய்யக்கூடாது.

ஒரு திருநங்கையோ அல்லது திருநம்பியோ பால்மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ள விரும்பினால் அவர், ஆபரேஷனுக்கு முன்னால் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை `ஹாரி பெஞ்சமின் ஸ்டேன்டர்டு ஆப் கேர்’ என்ற நடத்தை விதிமுறை விளக்குகிறது.
அதன் முக்கிய ஐந்து அம்சங்கள்:
1.    முழுமையான மருத்துவ பரிசோதனை
2.    மனநல கவுன்சலிங்
3.    பெண் போல் மாற விரும்பும்போது, ஆபரேஷனுக்கு முன்பே அதுபோல் வாழ்ந்து, பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் அனுபவங்களைப் பெறுவது
4.    ஹார்மோன் சிகிச்சை
5.    அறுவை சிகிச்சை

இவை ஒன்றன்பின் ஒன்றாக செய்யப்படுகின்றன. சிலர் மனநல நிபுணரிடம் கவுன்சலிங் பெறும்போதே குழப்ப மனநிலையில் இருந்து விடுபட்டு தெளிவு பெற்றுவிடுகிறார்கள். திருநங்கையாக இருந்தால் சிலர் `தனக்கு பெண் உடை அணிவதில் மட்டும்தான் ஆசை இருக்கிறது. ஆபரேஷன் செய்து கொள்ள விருப்பம் இல்லை’ என்று ஒதுங்கிவிடுகிறார்கள். சிலர் பெண் உடை அணிந்து சமூகத்தில் வாழ்வு முறை அனுபவத்தை பெறும்போது உருவாகும் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல், தான் ஆண் உடையிலே வாழ்ந்து மீதி காலத்தை கழித்திடுவதாக சொல்வதுண்டு.

திருநம்பியாக இருந்தால் இதே மருத்துவ அணுகுமுறையில் ஆண் உடை அணிதல், ஆணாக வாழ்ந்து சமூகத்தில் வாழ்வு முறை அனுபவத்தை பெறும்போது உருவாகும் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும் என்ற திறனும், தைரியமும் அவசியம்.

முதல் மூன்று கட்டங்களையும் கடந்து தன்னை உணர்ந்து, தன் விருப்பங்களை உணர்ந்து, தனக்கு ஆபரேஷன் தேவை என்ற தெளிவான நிலைக்கு அவர்கள் வந்த பிறகு ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஹாரி பெஞ்சமின் குறிப்பிடுகிறார். திருந‌ர்களுக்கு இந்த கவுன்சலிங் சிகிச்சை ஒரு வருடத்திற்கு மேல் நீளும். இவ்வாறு முறைப்படுத்தப்பட்டு செய்யப்படும் ஆபரேஷன்கள் மட்டுமே சிறந்தாக இருக்கும். இந்த காலகட்டங்களில் திருநங்கைக்கு தனது தாயாரின் அருகாமை மிக அவசியம்.

இந்த சமூகம் கருணை நிறைந்தது. பிராணிகள் மீதும் கருணை செலுத்துகிறது. சில பிராணிகளையும், மரங்களையும் வணங்குகிறது. அத்தகைய கருணை கொண்ட மனிதர்களுக்கு இயற்கையான தாம்பத்யத்தில் ஆண், பெண் குழந்தைகள் பிறப்பதுபோல்தான் திருனர்களும் பிறக்கிறார்கள். வீடுகளில் வளர்க்கும் பிராணிகளைக்கூட நன்றாக புரிந்து கொண்டு நம்மோடு அவைகளை வாழ அனுமதிக்கிறோம். அவைகளை பராமரித்து போற்றி, நாலு பேரிடம் அதைப் புகழ்ந்தும் பேசுகிறோம்.

அந்நியர்களை கூட அன்புடன் அரவணைக்கும் தேசம் நம் தேசம். அப்படிப்பட்ட நாம், நம் தசை, நம் ரத்தத்தில் நம்மோடு ஒருவராகப் பிறந்த குழந்தை திருந‌ர்தன்மை கொண்டதாக இருந்தால் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள ஏன் தயங்குகிறோம்? “ஒரு தேசத்தின் மேன்மை, அதிலிருக்கும் எளியவர்கள் நடத்தப்படும் விதத்தை வைத்து மதிப்பிடப்படுகிறது” என்றார் அண்ணல் காந்தியடிகள்.

திருந‌ர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். அவர்கள் நிலையில் நம்மை வைத்துப்பார்த்து அவர்களையும் முழுமையாக குடும்பத்தோடு இணைத்து, வளர்த்து, படிக்கவைத்து, ஆளாக்கி வாழ வழி வகை செய்து கொடுப்போம். அவர்களும்  மிகச்சிறந்த ஆற்றலும், அளவு கடந்த அன்பும் கொண்டவர்கள். எதற்கும் லாயக்கற்றவர்கள் என்றோ, இதற்குத்தான் அவர்கள் லாயக்கானவர்கள் என்றோ முத்திரை குத்தாமல் எல்லோரையும் போல் அவர்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுப்போம். திருந‌ர்கள் சமூகத்தில் இருந்தும் அறிஞர்களும், மேதைகளும், தலைவர்களும், பல்துறை நிபுணர்களும் நிறைய உருவாக வழி செய்வோம்.

மாறிவரும் காலச்சூழல் திருந‌ர்கள் மதிப்போடு வாழ வழிசெய்கிறது. சமூகரீதியாகவும், சட்டரீதியாகவும் பல நல்மாற்றங்கள் நிகழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. திருந‌ர்களுக்கு சட்டரீதியான, சமூகரீதியான, மருத்துவரீதியான பாதுகாப்பளிக்க வழிசெய்வோம்.

வெல்க மானுடம்!

2 comments:

Kirubanandan Palaniveluchaamy said...

திருனர்களுக்கென்று தனி சமூக சூழ்னிலை உறைவிடம் கல்வி வேலைவாய்ப்பு உள்ள ஒரு ஆசிரமம் உருவாக்குங்கள் ! ஒரளவு பொருளாதார பலத்தையும் அரசு ஆதரவையும் பெற முயற்சி செய்யுங்கள் ! அதற்கு கடவுளிடம் காத்திருங்கள் ! தியானம் வேண்டுதல் செய்யுங்கள் !

திருனர் பிறப்பின் ரகசியமே ஆண்பெண் பேதத்தை கடந்து அண்ணகர் ஆவதுதான் ! ஒரு ஆணைக்காட்டிலும் பெண்ணைக்காட்டிலும் உண்ணதமான அண்ணகர் நிலையை திருனரால் எளிதில் அடைய முடியும் ! இந்த திசையில் அவர்களை ஊக்குவிக்க முயற்சித்தால் பெரும் மாற்றம் உருவாகும் ! கடவுளின் கிருபையும் உண்டாகும் !

Kalki | கல்கி said...

மத ரீதியினால அங்கீகரிப்பைவிட சக மனிதராக முதலில் அங்கீகரிப்பதே முதல் தேவை.. தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி..

குறி அறுத்தேன் - கவிதைக்குறும்படம்

தேன்தமிழ் கற்ற  திமிரில் வந்தாள் திருநங்கை. நிமிர்ந்து நின்றாள்  கவிதை சொன்னாள்!