Saturday, August 04, 2012

திருநங்கைகள் ஏன் பாலியல் தொழில் செய்கிறார்கள்?

திருநங்கைகள் நிறையபேர் பாலியல்தொழில்தான் செய்கிறார்கள் என்று ஒரு நண்பர் என்னிடம் குற்றச்சாட்டு வைத்தார். அவர்களாலும் சமூகத்தில் சீரழிவு நிலவுவதாக மறைமுகமாக குற்றம் சாட்டினார். ஏதோ எங்களுக்குள்தான் நாங்கள் தொழில் செய்துகொள்வதுபோலவும் அதனால் சமூகம் சீரழிவதுபோலவும் இருந்தது அவர் வாதம். திருநங்கைகளுடன் படுப்பது யார்? வக்கிரங்களை தணித்துக்கொள்ள அள்ளிஅள்ளிக்கொடுப்பது யார்? சமூகத்தை ஆளும் ஆண்கள்தானே.



எங்களை துரத்திய பெற்றோர்களும் இதே சமூகத்தில்தானே வாழ்கிறார்கள்? அதை எப்படி மறுப்பார்கள்? எப்போது கிண்டலும், கேலியும், எங்கள்மீது தொடுக்கப்படும் வன்முறையும் ஒழியுமோ அன்றுதான் நாங்கள் செய்யும் பாலியல்தொழிலும் ஒழியும்! என் தோழிகள் பலர் பாலியல் தொழில்தான் செய்கிறார்கள். ஆண்கள் அவர்களிடம் தங்கள் பாலியல் வக்கிரங்களை தணித்துக்கொள்ள அள்ளிகொடுக்கும் தொகை அதிகம். படிப்பறிவின்றி, சமூக அங்கீகாரம் இன்றி, பெற்றவர்களின் அன்பின்றி வாழ்பவர்களுக்கு என்ன லட்சியங்கள் வாழ்க்கையில் இருக்கமுடியும்? அவர்களை வழிநடத்திச்செல்ல இங்கு சில திருநங்கைகள்தான் உள்ளனர். அரசும், ஊடகங்களும், கல்வியாளர்களும் திருநங்கைகளின் பிரச்னைகளை அறிந்துகொண்டு உதவுவதற்கு முன்வந்தாலும் பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் இல்லாமல் போகும் திருநங்கைகள் வாழ்வில் எங்கு அன்பு கிடைக்கிறது? எங்களுக்குள் மட்டும்தான்

. எங்களின் காதலும், காதலர்களும் நான்கு சுவர்களுக்குள் மட்டும்தான். அழகும், பணமும் இருக்கும்வரைதான். எங்களின் அழகும், பணமும் தீர்ந்ததும் இந்தப்பாவிகள் பிறப்பால் பெண்ணாக உள்ளவர்களை, சமூகம் அங்கீகரிப்பவர்களை திருமணம் செய்து அவர்களின் வாழ்வையும் சீரழிக்கின்றனர். அப்படிப்பட்ட ஆண்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களை பிடித்து சுவற்றில் மோதி மண்டையைப்பிளக்கவும் ஆசைப்பட்டிருக்கிறேன். என்னைப்போன்ற படித்த, வசதியான, பெற்றோரின் அன்பிலும், அரவணைப்பிலும் வளர்ந்த திருநங்கைகள்தான் வாழ்க்கையில் ஜெயிக்கமுடிகிறது. மற்றவர்கள்?

முன்பெல்லாம் ஒவ்வொரு வருடமும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் அழகிப்போட்டிகளில் ஆணுறை பற்றியும், பாதுகாப்பான உடலுறவு பற்றியும்தான் அதிகக்கேள்விகள். பல ஆண்டுகளாக நடத்தப்படும் அழகிப்போட்டிகளில் ஜெயிக்கும் திருநங்கைகளுக்கு பத்தாயிரம் ரூபாயும், கலர் டெலிவிஷன் பெட்டியும் கொடுத்து மேடையை விட்டு இறக்கிவிடுவார்கள். அதன்பிறகு அவர்கள் என்ன ஆகிறார்கள் என்று யாருக்கு அக்கறை? என் தோழிகளில் பலர் அழகிப்போட்டிகள் வென்றவர்கள். திருநங்கை அழகிப்போட்டியில் வென்றவர்கள் இன்று என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று அறிந்தால் அதிர்ச்சிதான் அடைவார்கள் பத்திரிக்கை நண்பர்கள். இப்போது நிலை ஓரளவு மாறியிருக்கிறது.

ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்றும் தெருவில் பாலியல் தொழிலுக்காக நிற்கிறார்கள். நிறையபேர் கடைகடையாக சென்று பிச்சை எடுக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய்களுக்கும், சுஷ்மிதா சென்களும், திரிஷாக்களும் அழகிப்போட்டிகளில் வென்றால் அவர்களின் தலையெழுத்து ஒரு நொடியில் மாறிவிடும். ஆனால் எங்களுக்கு?

ஒவ்வொரு வருடமும் எனது தோழிகளை தற்கொலைகளிலும், உடல்நல கோளாறுகளாலும் இழக்கிறேன். இந்த வருடம் யார் யாரோ என்பதை நினைத்தால் கலக்கமாக இருக்கிறது. என்னால் என்னென்ன வழிகளில் அவர்களை மீட்கமுடியும் என்பதறிந்து தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறேன். இங்கு வெளிநாடுகளிலிருந்து கொட்டப்படும் கோடிகள் எல்லாம் பாதுகாப்பான உடலுறவுக்காகவும், எய்ட்ஸ் தடுப்புப்பணிக்காகவும்தானே? பத்துவருடங்களாக இதைத்தானே செய்துகொண்டிருந்தார்கள். இப்போதுதான் கல்வி, 
வேலைவாய்ப்பு, மன நலம், குடும்பங்கள் ஏற்றுக்கொள்வது பற்றி பணியாற்றுகிறார்கள். நல்லது.



 பொதுவெளிச்சமூகத்தில் மாறுபட்ட பாலியல் அடையாளம் கொண்ட குழந்தைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நல்ல குடிமக்களாக வாழும் சூழ்நிலை என்று உருவாகிறதோ அன்றுதான் திருநங்கைகள் பிச்சை எடுப்பதையும், பாலியல் தொழில் செய்வதையும் விட்டுவிட்டு நிம்மதியாக தலைநிமிர்ந்து வாழமுடியும்.

அத்தகைய மாற்றம் கொண்டுவர நீதி அரசர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள் எங்களுக்கு தோள்கொடுக்க வேண்டும். குடும்பங்கள் எங்களை வீட்டைவிட்டு துரத்தாமல் ஏற்றுக்கொண்டு தடையில்லா கல்வியை தரவேண்டும். கல்வியே எங்களை மீட்கும் ஆயுதம். அதை எங்களுக்கு கொடுங்கள். கல்வி பெற்ற திருநங்கைகள் திருநம்பிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும். மாற்றம் அங்கிருந்துதான் தொடங்கும். அதுவரை ஏன் பாலியல் தொழில் செய்கிறார்கள் என்று தயவு செய்து யாரும் என்னிடம் கேட்காதீர்கள். 



No comments: