Monday, April 15, 2013

ஈழம் என்றொரு சிதைந்த யோனி..

விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள திருநங்கை கல்கி எழுதிய 'குறி அறுத்தேன்' நூலிலிருந்து ..
ஈழம் என்றொரு சிதைந்த யோனி..
_______________________________________


திருநங்கை கல்கி சுப்ரமணியம்

நான்
சிந்திய குருதி
காய்ந்தபின்பு
செதுக்கிய வடுக்கள்
அடையாளங்களாய்
என் யோனியில்
நிலைக்கின்றன.

இப்போதெல்லாம்
வடுக்களை நான்
தொடும்போது
ஐயோ
வயிறு கிழிந்து
யோனி பிளந்து
இறந்துபோன
என் ஈழத்துச்சகோதரியின்
நினைவுகள்
நெருப்பாய் தகிக்கிறதே..

எனக்கான தேடலில்
நானும்
தன் இனத்திற்கான தேடலில்
அவளும்
வலி சுமந்தோமே...
அவள் வலியில்
சொற்ப வலியும்
வழிந்த குருதியின்
வாசமும் ஈரமும்
நானறிவேனே.
அந்த வலியின்
வாசல்வரை
சென்றுவந்தேன்
என்பதாலேயே
அவளுக்கு
நான் இன்னும்
நெருக்கமானேனே.

அவளை பிளந்து
கொன்ற மிருகங்கள்
அத்தோடு விடவில்லையே
அவள் பெற்ற
நன்மக்களையும்
தரையில்
தலையடித்து
கொன்றனரே?

ஐயோ அம்மிருகங்கள்
இன்னும் உயிருடன்
உலவிக்கொண்டுதானே
இருக்கின்றன.
என் செய்வேன்?

திருநங்கை
எனைக்கண்டு
சிரிக்கும்
தெருநாய்களிடம்
அவளை
சிதைத்துக்கொன்ற
மிருகங்களின்
சாயலை
காண்கிறேன்.
விறுவிறுவென்று
வெறிகொண்ட
வேங்கை ஒன்று
உள்ளே
திடுக்கென்று
விழிக்கிறது.

எனக்கான ஒன்று
நடக்கும்போது
விழி சிவந்து
நரம்புகள் புடைக்கின்றதே..
என் இனத்திற்கான
ஒன்று நடக்கும்போது
ஏன் சிவக்கவில்லை
புடைக்கவில்லை?
எங்கே போயிற்று
தமிழச்சி என்
வரலாற்று வீரம்?

ஐயோ
புனைவுக்கதைகள்
சொல்லி
எனை
ஏமாற்றிவிட்டனரே?

தமிழே..
தனைமறந்து
கவிதை சொல்வதையும்
தலைகவிழ்ந்து
கவலை கொள்வதையும்
தவிர வேறென்ன
கற்றுக்கொடுத்தாய்
எனக்கு...
என்
தலைமுறையையே
மயக்கத்தில்
வைத்தாயே?


ஐயோ
என் அடையாளம்
தந்த
அவமானங்கள்
இதயத்தில்
கீறல்களாய் இருக்க,

தொலைந்த தமிழரின்
சவக்குழிகளும்
இழந்த ஈழத்தின்
வரலாறுகளும்
சிவந்த
என் விழிகளில்
வழிந்த
கண்ணீர் கோடுகளிலும்,
சிதைந்த
என் யோனியின்
காய்ந்த மேடுகளிலும்,
இறந்த
என் இனத்தின்
வலிகளும்
வடுக்களுமாய்
புதைந்துபோயினவே.......
-------------------------------------------------------------------
.
நூலைபெற இங்கே சொடுக்குங்கள்.

Saturday, April 06, 2013

குறி அறுத்தேன் - கவிதை : கல்கி சுப்ரமணியம்


விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள திருநங்கைகளின் வாழ்வியலை ரௌத்திரமாகச்சொல்லும் எனது கவிதை நூலான 'குறி அறுத்தேன்' கவிதை நூலிலிருந்து தலைப்புக்கவிதை...



குறி அறுத்தேன்
________________

மாதவம் ஏதும் 
செய்யவில்லை நான்.
குறி அறுத்து
குருதியில் நனைந்து
மரணம் கடந்து
மங்கையானேன்.
கருவறை உனக்கில்லை
நீ பெண்ணில்லை
என்றீர்கள்.
நல்லது.

ஆண்மையை
அறுத்தெறிந்ததால்
சந்ததிக்கு
சமாதி கட்டிய
பட்டுப்போன
ஒற்றை மரம் நீ,
விழுதுகள் இல்லை
உனக்கு,
வேர்கள்
உள்ளவரை மட்டுமே
பூமி உனை தாங்கும்
என்றீர்கள்.
நல்லது.

நீங்கள் கழிக்கும்
எச்சங்களை,
சாதி வெறியும்
மதவெறியும்
கொண்டு நீங்கள்
விருட்சமாக்க
விதைபோட்ட
உங்கள் மிச்சங்களை
சிசுவாக சுமக்கிற
கருவறை
எனக்கு வேண்டாம்.
உங்கள்
ஏற்றத்தாழ்வு
எச்சங்களை
சுமந்ததால்
பாவம்
அவள் கருவறை
கழிவறை ஆனது.

நல்லவேளை
பிறப்பால்
நான் பெண்ணில்லை.
என்னை பெண்ணாக
நீங்கள்
ஏற்க மறுத்ததே
எனக்குக்கிடைத்த விடுதலை.


பெண்மைக்கு
நீங்கள் வகுத்துள்ள
அடிமை இலக்கணங்களை
நான் வாசிப்பதில்லை.
என்னை இயற்கையின் பிழை
என்று தாராளமாய்
சொல்லிக்கொள்ளுங்கள்.
நான் யார் என்பதை
நானே அறிவேன்.


மதம் மறந்து
சாதி துறந்து
மறுக்கப்பட்டவர்கள்
ஒன்றுகூடி
வாழும் வாழ்க்கையை
வாழமுடியுமா
உங்களால்?

கருவில்
சுமக்காமலேயே
தாயாக முடியுமா
உங்களால்?

மார்முட்டி பசியாறாமலேயே
மகளாக முடியுமா
உங்களால்?

என்னால் முடியும்.

உங்களின் ஆணாதிக்க
குறியை அறுத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் யார் என்பதை
அப்போது
நீங்கள் அறிவீர்கள்.

பிறகு சொல்லுங்கள்
நான் பெண்ணில்லை என்று.


                       -திருநங்கை கல்கி சுப்ரமணியம் - 

நூலை விகடன் வழியாக  பெற இங்கே சுட்டுங்கள். 

விதியை எழுதினேன்.. - கவிதை : திருநங்கை கல்கி



விதியை எழுதினேன்..
__________________________

கடவுளுக்கு மனைவியாகி
ஒரே நாளில் விதவையான 
ஒரு பரிசோதனை கவிதை நான்.. 
என் தாலியின் வாழ்வு
ஒருநாள் மட்டும்.
அறுத்த என் தாலி
எங்கோ மரத்தில் கட்டப்பட்டு
மக்கிப்போய் மண்ணாகியிருக்கும்
அந்த தாலி
என் விதியை நிர்ணயிப்பதில்லை
என்பதை அறிந்துகொண்டேன்
எல்லோருக்கும் ஜாதகம்
இருக்கும்.
எனக்கு இல்லை
என் விதியை
நானே எழுதிக்கொள்ள
எனக்கிருக்கிறது
வலிமை மிக்க ஒரு மனம்
தெளிவு பெற்ற என் அறிவு.
அறுத்தெறிந்த தாலிக்கு
அர்த்தமில்லை
வெறும் மஞ்சள் கயிறு
அதில் ஒன்றுமில்லை
அந்த வேதனைச்சடங்கு
எனக்கு வேண்டாம்.
சடங்குகளை மூட்டைகட்டி
சாக்கடைக்குள் போட்டபின்
புன்னகை செய்ய கற்றுக்கொண்டேன்
பூக்களோடு பேச கற்றுக்கொண்டேன்
காதலிக்க கற்றுக்கொண்டேன்
கவிதை எழுத கற்றுக்கொண்டேன்
கவிதையாகவே
வாழவும் இன்று கற்றுக்கொண்டேன்.. 


- திருநங்கை கல்கி சுப்ரமணியம்-