Tuesday, September 02, 2014

கல்கி அக்காவும் நானும் - எஸ்தர் சபியின் வலைப்பூ பேட்டி

 கல்கி அக்காவும் நானும்


நர்த்தகி திரைப் படம் மூலமாக கதாநாயகியாக திரையுலகில் கால் பதித்தவர் நடிகை கல்கி. அது மட்டுமல்லாது அவர் ஓர் திருநங்கைகள் சமூக நல பணியாளர். ஒரு வழியாக அவரிடம் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பத்து கேள்விகளும் கேட்டு முடிக்க அப்பப்பா இரண்டு நாட்களாகி விட்டன தெரியுமா? முதலில் சுக நலன்களை விசாரித்து விட்டு அப்புறமா செவ்விக்கு சென்றோம்.

01- உங்கள் சகோதரி அமைப்பு ஏன் எதற்காக?

ஆதரவற்ற, உதவி இழந்த, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, பாடசாசைகளிலும், அலுவலகங்களிலும் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேற்றுவதற்காக..

02- நர்த்தகி பட வாய்ப்பு பற்றி கூறுங்கள்.

என் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. என்னை ஓர் மிக சிறந்த நடிகையாக உலகிற்கு வெளிபடுத்த இயக்குனர் விஜயபத்மா மூலமாக கிடைக்கப்பெற்ற ஓர் வாய்ப்பு. இது கடவுள் தந்த வரம் என்றே கூறமுடியும்.

03- ஓர் நடிகையாக கல்கி எப்படி?

ஓர் சவாலான கதாபாத்திரம், நடிப்பு திறனை வெளி கொணர கூடிய பாத்திரம், கல்கி எவ்வளவு நேரம் திரையில் தோன்றுவேன் என்பது முக்கியமல்ல 05 நிமிடங்கள் என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க கூடிய கதாபாத்திரமாக அமைந்தால் நல்லது. நான் கடவுள் படத்தில் பூஜாவின் பாத்திரம் போல் இருந்தால் எனக்கு பிடிக்கும்.

04- இப்போது நடிக்கும் திரைப் படங்கள் என்ன?

ஓர் மலையாள படத்தில் கதா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாளியுள்ளேன். கதையில் மாற்றம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு சற்று தாமதமாகியுள்ளது.பிரெஞ்சு மொழி பட வாய்ப்பு ஒன்று வந்தது.ஆனால் மறுத்துவிட்டேன் காரணம் இந்தியாவை விட்டு 01 வருடகாலம் பிரான்ஸில் தங்கியிருந்து படத்தை முடித்து கொடுக்க வேண்டிய சூழல்..

05- உலகம் திருநங்கைகளை திருநங்கை எனும் போர்வைக்குள் தள்ளிவிட்டது. ஆனால் திருநங்கைகள் யாரும் திருநங்கையாக இருக்க ஆசைப்படவில்லை ஒரு பெண்ணாக வாழவே ஆசைப்படுகிறார்கள்.  அவர்கள் பெண் உலகை சார்ந்தவர்கள். இது பற்றி உஙகள் கருத்து.

கலாசாரம், குடும்பம், என்று திருநங்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு கைவிலங்கிடப்பட்டிருக்கிறார்கள். பெண்களும் அவ்வாறே இதனால் அவர்கள் திறமைகள் முயர்ச்சிகள் எல்லாம் கிழ் விழுந்து போகும் நிலை கண் கூடு. உலகம் திருநங்கைகளை திருநங்கை எனும் போர்வைக்குள் வைத்திருப்பது ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் நிலை என்ன என்பதை காட்டுகிறது.

06- ஏதாவது தொலைக் காட்சி தொடர்கள் மூலமாக திருநங்கைகள் பிரச்சினைகளை சொல்ல முயர்ச்சிக்கலாமே?..

முயர்ச்சிக்கலாம் ஆனால் நிறுவனங்கள் தயாரிக்க முன்வருவது மிக கடினம்.

07- தமிழ் நாட்டு திருநங்கைகளிடத்து பொதுவாக படித்த திருநங்கைகளிடத்து பல விடயங்களிலில் ஒன்றுக் கொன்று முரண் பட்ட கருந்துக்கள் நிலவுகின்றன. இந்நிலை ஏன?

ஈகோ நான் பெரிசா நீ பெரிசா என்கிற பொறாமைதான்.

08- உங்களுக்கு இலங்கை திருநங்கைகளை பிடிக்குமா?

இலங்கை திருநங்கைகள் மட்டுமல்ல எல்லா தமிழ் திருநங்கைகளையும் பிடிக்கும் தமிழ் திருநங்கைகள் என்பதை விட திருநங்கைகள் எல்லாரையும் பிடிக்கும் பொதுவாக தமிழ் திருநங்கைகளை அதிகம் பிடிக்கும்...

09- உங்கள் வருங்கால கணவர் குறித்து கூறுங்களேன்,

என் கணவன் காதலன் எல்லாம் என் மடிகணினிதான் (லாப் டாப்). என்னோடு எந்நேரமும் இருந்து எனக்காக உழைக்கும் என் கணினிதான் என் கணவன் காதலன் எல்லாம். நான் பெரிய மனுஷியாக உருவானதற்கு என் லாப் டாப்பும் ஒரு காரணம் அதனால் என் கணவன் என் லாப் டாப்தான்.

அவருக்கு கொஞ்ஞம் உடம்பு சரியில்ல டாக்டர் வந்து கொண்டு போய்ட்டார். எப்பிடியும் இன்னைக்கு வந்திடுவார். (புரியலயா அதானப்பா லாப் டாப் பழுதாகிட்டுதாம் திருத்திறத்துக்கு கொண்டு போய்ட்டாங்களாம்.plz pray 4 him )

10- உங்களுக்கு எஸ்தர் சபியை பிடிக்குமா?

(ஒர் புன்சிரிப்புடன்) எஸ்தரை எனக்குப் பிடிக்கும் இலங்கையில் இருந்து கொண்டு திருநங்கைகள் விடயத்தில் கவனப்படுபவள். எஸ்தரை இது வரைக்கும் பார்த்தது கிடையாது ஆனாலும் எஸ்தரை பிடிக்கும். அவளின் முற்போக்குதனமான எழுத்தும் பிடிக்கும்.


அப்பப்பா ஒரு வழியா முடிச்சாச்சு. நன்றி கல்கி அக்கா என்னை பிடிக்கும் என்று கூறியதற்காக.
 
 

Sunday, August 31, 2014

ஒரு ஊரை சீரமைக்க என்னால் முடியுமெனில் நம் தேசத்தை சீரமைக்க திருநங்கையரால் முடியும்! .

டந்த மூன்று ஆண்டுகளாக புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் நகரின் உள்ளே அமைந்துள்ள அழகான கோட்டக்கரை கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன். இங்கு என்னை யாரும் திருநங்கை என்று பார்ப்பதில்லை. அதிகம் படித்தவள் என்பதாலும், மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவள் என்பதாலும் ஊர் பொது பிரச்சனைகளுக்கு  தீர்வுகாண மக்களும், இவ்வூரின் நாட்டாமைகள் மற்றும் தலைவரும் என்னிடம் வருவர். சென்ற வருடம் இங்கு ஊருக்குள் செல்போன் டவர் கட்ட முயன்றபோது ஊர் தலைவர்கள் என்னிடம் வந்தனர். அதை சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.


சென்ற மாதம் ஆரோவில்லை சேர்ந்த ஒரு வெளிநாட்டு நபர் நிலத்தகராறில் பெண்களை அடித்த விவகாரத்தில் பெண்கள் என்னிடம் வந்தனர். காவல்நிலையம் சென்று புகார் கொடுத்தது மட்டுமல்லாமல் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆரோவில் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்கவும் போராட தொடங்கினோம். அதில்தான் ஊர் பெண்கள் அனைவரையும் இணைத்தேன். இதற்கு இந்த கிராமத்தை சேர்ந்த விஜயாம்மா, சரஸ்வதி, தெய்வயானை, நீலா என்று பலபெண்கள் எனக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர். காவல் நிலையம் சென்று புகார் வாங்க மறுத்த போலீஸை கண்டித்து தர்ணா, கலெக்டரிடம் புறம்போக்கு நிலமீட்பு மனு, பெண்களை தாக்கிய வெளிநாட்டு நபர் மீது நடவடிக்கை எடுக்க மனு என்று தொடங்கிய மக்கள் போராட்டத்தை ஊரினுடைய வளர்ச்சித்திட்டங்கள் மீதும் கவனம் கொள்ள ஒருங்கிணத்தேன். பெண்களில் துடிப்பான ஆர்வமுள்ளவர்களை சேர்த்து கோர் டீம் உருவாக்கினேன்.

இந்த கோட்டகரை கிராமத்தில் பல லட்ச ரூபாய் செலவு செய்து தொடங்கிய பல அடிப்படை திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மருத்துவ சேவை மையம் மூன்று ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கிறது. குடிதண்ணீர் சுத்திகரிப்பு திட்டம் செயல்படாமல் உள்ளது. ஏழைப்பெண்கள் பயன்படுத்த பொதுக்கழிப்பறை இல்லை.  இப்படி அடிப்படை வசதிகள் இல்லாத கிராமமாக உள்ளது.


இவற்றை பெண்களை வைத்து செயல்படுத்த முடிவு செய்தேன். ஊர் பெண்களை சேர்த்துக்கொண்டு பூட்டிக்கிடந்த மருத்துவ சுகாதார மையத்தை திறந்து கிராம பெண்கள் சுத்தம் செய்ய இளைஞர்கள் வெள்ளையடித்தனர். ஊர் இளைஞர்கள் உதவிக்கு வந்தனர். இளைஞர்களும், ஊரிலுள்ள நாட்டாமை பெரியவர்களில் சிலரும் தங்களால் இயன்ற நிதியளித்தனர். எனது கையிருப்பு நிதியையும், என் நண்பர்களிடமும் உதவி பெற்று முழுமுயற்சியில் இறங்கி மருத்துவ சுகாதார மையத்திற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்துள்ளோம்.





வாரம் ஒருமுறை அலோபதி மருத்துவர் மற்றும் மாற்று முறை மருத்துவர்கள் வந்து மக்களுக்கு சேவை செய்யவும் எற்பாடு செய்துவிட்டேன். பெரிய மருத்துவ மனைகளான ஜிப்மர் மற்றும் பிம்ஸ் மருத்துவமனைகளுக்கு சென்று மெடிகல் சூபரிண்டண்டை சந்தித்து கோட்டக்கரை கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்துவிட்டோம். மற்ற அனைத்து பணிகளும் செய்துமுடிக்கும் நிலையில் உள்ளோம்.

'ஆரோவில் கிராம சுகாதார மையம்' என்ற பெயரை 'கோட்டக்கரை கிராம சுகாதார மையம்' என்று மாற்றினேன். பெரும் முயற்சிக்குப்பின் 'கோட்டக்கரை  கிராம சுகாதார மையம்' ஆகஸ்ட் 15 அன்று காலை 8.30 மணிக்கு திறந்தோம். மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இது அமைந்தது. சென்னையிலிருந்து வந்து எனது நண்பர்கள் இவ்விழாவில் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். என்னை கவுரவிக்கும் விதமாக ஊர் பெண்கள் எனக்கு சீர் தந்து மரியாதை செய்தனர்.





சிறு சிறு இடர்பாடுகள் இருந்தாலும் அவற்றை சீர்செய்து தொடர்ந்து பணியாற்ற உள்ளோம். அடுத்து குடிநீர் சுத்திகரிப்பு திட்டம், மூடிக்கிடக்கிற நூலகம், மகளிர் மன்றம் ஆகிய திட்டங்களெல்லாம் தொடங்கப்பட்டு மூடிக்கிடக்கின்றன. பெண்கள் மற்றும் இளைஞர்கள் உதவியோடு இவை அனைத்தையும் செயல்படுத்த உள்ளேன். ஊர் பெரியவர்களின் ஆசியும், அன்பும் எனக்கு என்றும் கிடைக்கும் என்று நம்புகிறேன். என் பணிகள் அனைத்திற்கும் உங்களின் அன்பும், ஆதரவும், வழிகாட்டலும் இருக்கும் என்று திடமாக நம்புகிறேன் தோழர்களே!

இங்கு ஆரோவில் நகரிலுள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்களில் இங்குள்ள பெண்கள் தினமும் 8 மணிநேரம் வேலை செய்கின்றனர்.  ஆனால் மிகக்குறைந்த கூலி தந்து இந்நிறுவனங்கள் அவர்களை சுரண்டுகின்றன. விவசாயம் அழிந்து போனதால் வேறுவழியின்றி மிகக்குறைந்த கூலி பெற்று தங்களின் உழைப்பை தருகின்றனர் பெண்கள். அவர்களில் கோட்டகரை கிராமத்திலுள்ள சிலரை முதலில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சுயதொழில் தொடங்க உற்சாகப்படுத்தி உதவி செய்கிறேன். முதலாவதாக வாரம் ஒருநாள் ஞாயிறு அன்று மதியம் மட்டும் பிரியாணி தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் 5 பெண்களை இணைத்து ஆகஸ்டு 31, 2014 முதல் தொடங்கவுள்ளேன். அவர்களே முழுக்க முழுக்க பயனடையும் வகையில் அவர்களுக்கு முதுகெலும்பாக செயல்பட்டு வழிகாட்ட உள்ளேன்.

இந்த கிராம மக்கள் என்மீது வைத்துள்ள அன்புக்கும், மரியாதைக்கும் திருப்பிச்செய்யும்படியாக  என்னால் இயன்ற அளவு வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளேன். எனக்கு உள்ள ஏராளமான பணிகளில் இதுவும் ஒரு முக்கிய பணி. மக்களுக்காக முழுவதும் தன்னை அர்பணிக்கிற மனம் எல்லா திருநங்கைகளுக்கும் உண்டு.  ஒரு திருநங்கை நினைத்தால் ஒரு ஊரை மட்டுமல்ல ஒரு நாட்டையே சீர்திருத்த முடியும். எம்மை சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டு எமக்கான இடத்தை மறுக்காமல் இருந்தால் ஒவ்வொரு திருநங்கையும் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு தனது அற்பணிப்பை நல்குவர். இதை படிக்கும் உங்களைப்போன்றோரின் அக்கறையும், அன்பும், சமூக ஆர்வமும்தான் என்னைப்போன்றோரை உற்சாகப்படுத்துகிறது.

நான் நன்றி சொல்ல வேண்டுமெனில் என்னுடன் இணைந்து பணியாற்றுகின்ற விஜயா அம்மா, சரஸ்வதி சங்கர், சரஸ்வதி ஜெயக்குமார், நீலா கணேசன் போன்றவர்கள் முக்கிய பணியாற்றினார்கள்.  தெய்வ யானை, சரளா, கவிதா, தாட்சாயினி, வள்ளி, மங்கை என்று பல தோழியரின் பெயரைக்குறிப்பிட வேண்டியிருக்கும். அத்தனை பேருக்கும் நன்றி. மேலும் என் நண்பர்கள் ராக்கி, அருண் கிருஷ்ணா, தனசேகர், பாலாஜி, சிவநேசன் மற்றும் அவரின் சகோதரர் ராஜு, நாராயணன் ஆகியோருக்கு நன்றிகள். என் தோழமைகள் ஜெய் அண்ணா மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோருக்கு நன்றிகள்.

இந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள் ரங்கநாதன் அய்யா, ஏழுமலை அய்யா, ஜெயகுமார்  போன்றவர்களும், பிரகாஷ், மூவேந்தன், சங்கர், வேலாயுதம், சின்ன கண்ணு, விஜி, அன்பழகன், ராமச்சந்திரன் போன்ற பலர் பலவழிகளில் இந்த மையத்திற்காக பணியாற்றினார்கள்.

என்னை உற்சாகப்படுத்தும் என் நண்பர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். என்மீது பாசம் வைத்துள்ள என் திருநங்கை சமூகத்துக்கும் நன்றி. நான் கவலையுடன் தலை கவிழும் போதேல்லாம் என் தோள் தட்டி உற்சாகப்படுத்தும் என் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்த வெற்றிக்கதையை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்,

மீண்டும் ஒரு வெற்றியுடன் உங்களை சந்திக்கிறேன். மிக்க நன்றி.

மிக்க அன்புடன்,
திருநங்கை கல்கி சுப்ரமணியம்

aurokalki@gmail.com
http://www.sahodari.org

Thursday, May 22, 2014

மூன்றாம் பாலின அங்கீகாரம்: வெற்றிக்குப்பின்னால் தமிழ் திருநங்கைகள்

ஆகஸ்ட் 14, 2010.
63வது இந்திய சுதந்திரதினத்திற்கு முந்தைய நாள்தான் இந்தியாவில் வாழுகின்ற திருநங்கைகளின் சட்டரீதியான அங்கீகாரத்திற்கான முதல் விதை விதைக்கப்பட்ட பொன்நாள். வித்திட்டப்பட்ட இடம் தமிழகத்தின் தலைநகரிலுள்ள மெட்ராஸ் ஜூடிஷியல் அகாடமி. 

தமிழ்நாடு சமூக நலத்துறை, சென்னை உயர்நீதி மன்றம், Tamilnadu State Legal Services Authority, National Legal Services Authority மற்றும் Madras Judicial Academy ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய SEMINAR ON ISSUES RELATED TO TRANSGENDER COMMUNITY என்ற கருத்தரங்கம்தான் சட்ட வல்லுனர்களின் ஆதரவையும், புரிதலையும் பெற்று இன்று சட்ட அங்கீகாரம் கிடைத்ததற்கு துவக்கமாக அமைந்தது.

இந்நிகழ்வில் உச்சநீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி ஆல்டமாஸ் கபீர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி M.Y. இக்பால், ஸ்ரீசதாசிவன், அப்போதைய சமூகநல அமைச்சர் திருமதி.கீதா ஜீவன், சமூக நலத்துறையின் அப்போதைய இயக்குனர் திருமதி.நிர்மலா, காவல்துறை உயர் அதிகாரி அர்ச்சனா ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.`

இந்நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் திருநங்கை சமூகத்தின் பிரச்னைகளை விரிவாக திருநங்கை கல்கி எடுத்துரைக்க அதற்கான தீர்வுகளை பிரியாபாபு எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் திருநங்கை நூர்ஜஹான், திருநங்கை செல்வி ஆகியோரும் நீதிபதிகள் முன்னிலையில் உரையாற்றினர். திருநங்கை நூரி அவர்களும் பேசினார்.

இந்நிகழ்வுதான் NALSA  மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் திருநங்கைகளின் பிரச்னைகளை கொண்டு சென்ற முதல் முக்கிய நிகழ்வாகும்.

அதன்பிறகு ‘திருநர்களும், சட்டமும்’ (TRANSGENDER AND LAW) என்ற தேசிய அளவிலான முதல் கருத்தரங்கு பிப்ரவரி 04, 2011 அன்று புதுதில்லி விக்ஞான் பவனில் நடந்தது. திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை சட்ட ரீதியாக அங்கீகரிப்பது பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் தேசிய கருத்தரங்கு இதுதான். இககருத்தரங்கை Delhi Legal Services Authority மற்றும் United Nations Development Program உடன் இணைந்து National Legal Services Authority  ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திருமிகு. ஆல்டமாஸ் கபீர் அவர்கள். தமிழகத்தில் நடந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த கருத்தரங்காக இது அமைந்தது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து இருநூறுக்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகள் பங்கேற்ற  முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும் இது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆல்டமாஸ் கபீர், சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி M.Y. இக்பால், புதுதில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதி விக்ரஜீத் சென் ஆகியோர் முன்னிலை வகித்தனர். UNDPயின் இந்திய இயக்குனர் கைட்லி வைசென்னும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

தேசிய அளவில் திருநங்கை சமூகத்தின் பிரதிநிதிகளாக தென்னிந்தியாவிலிருந்து பிரியாபாபு மற்றும் கல்கி ஆகியோர்  அழைக்கப்பட்டிருந்தனர். வடக்கிலிருந்து லக்ஷ்மி நாராயண் திரிபாதி, கவுரி சாவந்த் மற்றும் சபீனா பிரான்சிஸ் ஆகியோர் அழைக்கப்பட்டு பங்கேற்றனர்.

இத்தேசிய கருத்தரங்கின் முக்கிய நிகழ்வே திருநங்கைகள் நீதிபதிகள் முன்னிலையில் ஆற்றிய உரைதான். தொடக்க நிகழ்வு உரைகள், மற்றும் வரவேற்புரைக்குப்பிற்கு நீதிபதிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு இரு சபைகளில் அமரவைக்கப்பட்டனர். ஒரு சபையில் நீதிபதிகள் மத்தியில் திருநங்கைகள் கல்கி சுப்ரமணியம் மற்றும் பிரியாபாபுவும், மற்றொரு சபையில் நீதிபதிகள் மத்தியில் லக்ஷ்மிநாராயண் திரிபாதி, கவுரி சாவந்த் மற்றும் சபீனா பிரான்சிஸ் ஆகியோரும் விரிவாக இந்தியாவில் திருநர்களின் சமூக, பொருளாதார பெரும்பின்னடைவையும், துன்பியல் வாழ்க்கையையும் ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர். வழக்கறிஞர் லயா மெஹ்தினி, டாக்டர் வெங்கடேஷ் சக்ரபாணி, எர்னெஸ்ட் நரோனா, சமூக ஆர்வலர் சொனாலி மெஹ்தா ஆகியோரும் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள State Legal Services Authority அமைப்புகள் இத்தகைய நிகழ்வுகளை நடத்தின.

 திருநங்கை பிரியாபாபு Delhi Legal Services Authority நடத்திய நிகழ்விலும், சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்சூரில் நடந்த நிகழ்விலும், Tamilnadu Legal Services Authority நடத்திய இன்னொரு நிகழ்விலும், பங்கேற்று மாற்றுப்பாலினத்தவரின் உரிமைகளை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

திருநங்கை கல்கி Maharashtra State Legal Services Authority  மற்றும் Article 39 அமைப்புகள் மும்பையில் நடத்திய நிகழ்விலும், அஸ்ஸாமிலுள்ள கவுகாத்தி பல்கலைக்கழகத்திலும், மத்திய பிரதேச மாநிலம் போபாலிலுள்ள Indian Judicial Academy யிலும், ஹரியானாவிலுள்ள Jindal Global School of Lawவிலும் பங்கேற்று மாற்றுப்பாலினத்தவரின் இன்றைய வாழ்வுநிலை பற்றியும், சட்ட அங்கீகாரத்தின் தேவைபற்றியும் உரையாற்றினார்.



திருநங்கை ஜீவா ராய்ச்சூரில் நடந்த நிகழ்விலும் ஹைதராபாத்தில் நடந்த சட்ட நிகழ்விலும், திருநங்கை ஆல்கா மற்றும் பாரதி கண்ணம்மா ஆகியோர் பல்வேறு சட்ட நிகழ்வுகளிலும், மாவட்ட அளவிலான நிகழ்வுகளில் கோவையில் சங்கீதாவும், திருச்சியில் காஜோலும், தூத்துக்குடியில் விஜியும் நீதிபதிகள் மத்தியில் திருநங்கைகளின் துன்பியல் வாழ்க்கையை நீதிபதிகளிடம் முறையிட்டார்கள். இதுபோல பல மாநிலங்களின் திருநங்கை பிரதிநிதிகள் பல்வேறு சட்ட கருத்தரங்கங்களில் பங்கேற்று தங்கள் வாழ்க்கை சிக்கல்களை, சட்ட அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தை நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துரைத்தனர். கர்நாடகாவில் திருநங்கை அக்காய், புதுதில்லியில் சீத்தா மற்றும் ருத்ராணி செட்ரி, மேற்கு வங்காளத்தில் அமிதாவா சர்கார் ஆகியோரின் பணிகள் குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் தொடர்ச்சியாகத்தான் NALSA (National Legal Services Authority)  இந்திய உச்சநீதி மன்றத்தில் திருநர்களுக்கு சமூக நீதிகேட்டு 2012ல் வழக்கு தொடுத்தது. வழக்குத்தொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் ஏப்ரல் 15, 2014 அன்று தமிழக திருநங்கைகள் தினத்தன்று திருநங்கைகளின் பாலின அடையாளத்தையும்  உரிமைகளையும் அங்கீகரிக்கிற வரலாற்றுச்சிறப்பு மிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பின் பின்னணியாகும்.

நம்நாட்டிலுள்ள சாதாரண எளிய திருநங்கைகளின் உழைப்பும், அளப்பறிய பணிகளும்தான் பெருமளவில் இத்தீர்ப்பின் காரணகர்த்தாவாக இருந்திருக்கிறது என்பதும், அதிலும் தமிழக திருநங்கைகள்தான் போராட்டக்களத்தில் பெரும்பங்கு வகித்தனர் என்பதும் மறுக்கமுடியாத பெருமைக்குரிய உண்மையாகும்.


REFERENCES:

August 14th, 2010: 
Tamilnadu Seminar:
http://www.thehindu.com/news/national/article1159795.ece 
http://www.deccanherald.com/content/135025/judges-favour-law-social-acceptance.html
http://timesofindia.indiatimes.com/city/chennai/Jurists-call-for-laws-quota-to-ensure-transgenders-rights/articleshow/6312542.cms?referral=PM
http://www.dnaindia.com/india/report-govt-should-enact-law-to-protect-transgenders-rights-experts-1423384


Feb 4th, 2011
National Seminar:
http://www.thehindu.com/news/national/article1159795.ece
http://www.deccanherald.com/content/135025/judges-favour-law-social-acceptance.html


District seminars:
http://www.hindu.com/2011/01/28/stories/2011012853510600.htm