ஒரு ஊரை சீரமைக்க என்னால் முடியுமெனில் நம் தேசத்தை சீரமைக்க திருநங்கையரால் முடியும்! .

டந்த மூன்று ஆண்டுகளாக புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் நகரின் உள்ளே அமைந்துள்ள அழகான கோட்டக்கரை கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன். இங்கு என்னை யாரும் திருநங்கை என்று பார்ப்பதில்லை. அதிகம் படித்தவள் என்பதாலும், மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவள் என்பதாலும் ஊர் பொது பிரச்சனைகளுக்கு  தீர்வுகாண மக்களும், இவ்வூரின் நாட்டாமைகள் மற்றும் தலைவரும் என்னிடம் வருவர். சென்ற வருடம் இங்கு ஊருக்குள் செல்போன் டவர் கட்ட முயன்றபோது ஊர் தலைவர்கள் என்னிடம் வந்தனர். அதை சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.


சென்ற மாதம் ஆரோவில்லை சேர்ந்த ஒரு வெளிநாட்டு நபர் நிலத்தகராறில் பெண்களை அடித்த விவகாரத்தில் பெண்கள் என்னிடம் வந்தனர். காவல்நிலையம் சென்று புகார் கொடுத்தது மட்டுமல்லாமல் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆரோவில் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்கவும் போராட தொடங்கினோம். அதில்தான் ஊர் பெண்கள் அனைவரையும் இணைத்தேன். இதற்கு இந்த கிராமத்தை சேர்ந்த விஜயாம்மா, சரஸ்வதி, தெய்வயானை, நீலா என்று பலபெண்கள் எனக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர். காவல் நிலையம் சென்று புகார் வாங்க மறுத்த போலீஸை கண்டித்து தர்ணா, கலெக்டரிடம் புறம்போக்கு நிலமீட்பு மனு, பெண்களை தாக்கிய வெளிநாட்டு நபர் மீது நடவடிக்கை எடுக்க மனு என்று தொடங்கிய மக்கள் போராட்டத்தை ஊரினுடைய வளர்ச்சித்திட்டங்கள் மீதும் கவனம் கொள்ள ஒருங்கிணத்தேன். பெண்களில் துடிப்பான ஆர்வமுள்ளவர்களை சேர்த்து கோர் டீம் உருவாக்கினேன்.

இந்த கோட்டகரை கிராமத்தில் பல லட்ச ரூபாய் செலவு செய்து தொடங்கிய பல அடிப்படை திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மருத்துவ சேவை மையம் மூன்று ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கிறது. குடிதண்ணீர் சுத்திகரிப்பு திட்டம் செயல்படாமல் உள்ளது. ஏழைப்பெண்கள் பயன்படுத்த பொதுக்கழிப்பறை இல்லை.  இப்படி அடிப்படை வசதிகள் இல்லாத கிராமமாக உள்ளது.


இவற்றை பெண்களை வைத்து செயல்படுத்த முடிவு செய்தேன். ஊர் பெண்களை சேர்த்துக்கொண்டு பூட்டிக்கிடந்த மருத்துவ சுகாதார மையத்தை திறந்து கிராம பெண்கள் சுத்தம் செய்ய இளைஞர்கள் வெள்ளையடித்தனர். ஊர் இளைஞர்கள் உதவிக்கு வந்தனர். இளைஞர்களும், ஊரிலுள்ள நாட்டாமை பெரியவர்களில் சிலரும் தங்களால் இயன்ற நிதியளித்தனர். எனது கையிருப்பு நிதியையும், என் நண்பர்களிடமும் உதவி பெற்று முழுமுயற்சியில் இறங்கி மருத்துவ சுகாதார மையத்திற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்துள்ளோம்.

வாரம் ஒருமுறை அலோபதி மருத்துவர் மற்றும் மாற்று முறை மருத்துவர்கள் வந்து மக்களுக்கு சேவை செய்யவும் எற்பாடு செய்துவிட்டேன். பெரிய மருத்துவ மனைகளான ஜிப்மர் மற்றும் பிம்ஸ் மருத்துவமனைகளுக்கு சென்று மெடிகல் சூபரிண்டண்டை சந்தித்து கோட்டக்கரை கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்துவிட்டோம். மற்ற அனைத்து பணிகளும் செய்துமுடிக்கும் நிலையில் உள்ளோம்.

'ஆரோவில் கிராம சுகாதார மையம்' என்ற பெயரை 'கோட்டக்கரை கிராம சுகாதார மையம்' என்று மாற்றினேன். பெரும் முயற்சிக்குப்பின் 'கோட்டக்கரை  கிராம சுகாதார மையம்' ஆகஸ்ட் 15 அன்று காலை 8.30 மணிக்கு திறந்தோம். மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இது அமைந்தது. சென்னையிலிருந்து வந்து எனது நண்பர்கள் இவ்விழாவில் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். என்னை கவுரவிக்கும் விதமாக ஊர் பெண்கள் எனக்கு சீர் தந்து மரியாதை செய்தனர்.

சிறு சிறு இடர்பாடுகள் இருந்தாலும் அவற்றை சீர்செய்து தொடர்ந்து பணியாற்ற உள்ளோம். அடுத்து குடிநீர் சுத்திகரிப்பு திட்டம், மூடிக்கிடக்கிற நூலகம், மகளிர் மன்றம் ஆகிய திட்டங்களெல்லாம் தொடங்கப்பட்டு மூடிக்கிடக்கின்றன. பெண்கள் மற்றும் இளைஞர்கள் உதவியோடு இவை அனைத்தையும் செயல்படுத்த உள்ளேன். ஊர் பெரியவர்களின் ஆசியும், அன்பும் எனக்கு என்றும் கிடைக்கும் என்று நம்புகிறேன். என் பணிகள் அனைத்திற்கும் உங்களின் அன்பும், ஆதரவும், வழிகாட்டலும் இருக்கும் என்று திடமாக நம்புகிறேன் தோழர்களே!

இங்கு ஆரோவில் நகரிலுள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்களில் இங்குள்ள பெண்கள் தினமும் 8 மணிநேரம் வேலை செய்கின்றனர்.  ஆனால் மிகக்குறைந்த கூலி தந்து இந்நிறுவனங்கள் அவர்களை சுரண்டுகின்றன. விவசாயம் அழிந்து போனதால் வேறுவழியின்றி மிகக்குறைந்த கூலி பெற்று தங்களின் உழைப்பை தருகின்றனர் பெண்கள். அவர்களில் கோட்டகரை கிராமத்திலுள்ள சிலரை முதலில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சுயதொழில் தொடங்க உற்சாகப்படுத்தி உதவி செய்கிறேன். முதலாவதாக வாரம் ஒருநாள் ஞாயிறு அன்று மதியம் மட்டும் பிரியாணி தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் 5 பெண்களை இணைத்து ஆகஸ்டு 31, 2014 முதல் தொடங்கவுள்ளேன். அவர்களே முழுக்க முழுக்க பயனடையும் வகையில் அவர்களுக்கு முதுகெலும்பாக செயல்பட்டு வழிகாட்ட உள்ளேன்.

இந்த கிராம மக்கள் என்மீது வைத்துள்ள அன்புக்கும், மரியாதைக்கும் திருப்பிச்செய்யும்படியாக  என்னால் இயன்ற அளவு வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளேன். எனக்கு உள்ள ஏராளமான பணிகளில் இதுவும் ஒரு முக்கிய பணி. மக்களுக்காக முழுவதும் தன்னை அர்பணிக்கிற மனம் எல்லா திருநங்கைகளுக்கும் உண்டு.  ஒரு திருநங்கை நினைத்தால் ஒரு ஊரை மட்டுமல்ல ஒரு நாட்டையே சீர்திருத்த முடியும். எம்மை சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டு எமக்கான இடத்தை மறுக்காமல் இருந்தால் ஒவ்வொரு திருநங்கையும் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு தனது அற்பணிப்பை நல்குவர். இதை படிக்கும் உங்களைப்போன்றோரின் அக்கறையும், அன்பும், சமூக ஆர்வமும்தான் என்னைப்போன்றோரை உற்சாகப்படுத்துகிறது.

நான் நன்றி சொல்ல வேண்டுமெனில் என்னுடன் இணைந்து பணியாற்றுகின்ற விஜயா அம்மா, சரஸ்வதி சங்கர், சரஸ்வதி ஜெயக்குமார், நீலா கணேசன் போன்றவர்கள் முக்கிய பணியாற்றினார்கள்.  தெய்வ யானை, சரளா, கவிதா, தாட்சாயினி, வள்ளி, மங்கை என்று பல தோழியரின் பெயரைக்குறிப்பிட வேண்டியிருக்கும். அத்தனை பேருக்கும் நன்றி. மேலும் என் நண்பர்கள் ராக்கி, அருண் கிருஷ்ணா, தனசேகர், பாலாஜி, சிவநேசன் மற்றும் அவரின் சகோதரர் ராஜு, நாராயணன் ஆகியோருக்கு நன்றிகள். என் தோழமைகள் ஜெய் அண்ணா மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோருக்கு நன்றிகள்.

இந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள் ரங்கநாதன் அய்யா, ஏழுமலை அய்யா, ஜெயகுமார்  போன்றவர்களும், பிரகாஷ், மூவேந்தன், சங்கர், வேலாயுதம், சின்ன கண்ணு, விஜி, அன்பழகன், ராமச்சந்திரன் போன்ற பலர் பலவழிகளில் இந்த மையத்திற்காக பணியாற்றினார்கள்.

என்னை உற்சாகப்படுத்தும் என் நண்பர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். என்மீது பாசம் வைத்துள்ள என் திருநங்கை சமூகத்துக்கும் நன்றி. நான் கவலையுடன் தலை கவிழும் போதேல்லாம் என் தோள் தட்டி உற்சாகப்படுத்தும் என் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்த வெற்றிக்கதையை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்,

மீண்டும் ஒரு வெற்றியுடன் உங்களை சந்திக்கிறேன். மிக்க நன்றி.

மிக்க அன்புடன்,
திருநங்கை கல்கி சுப்ரமணியம்

aurokalki@gmail.com
http://www.sahodari.org

Comments