Tuesday, February 03, 2015

எனது முதல் நூல் ‘குறி அறுத்தேன்’ – விகடன் பிரசுரம்


ஒரு திருநங்கையாக நான் வாழ்ந்த வாழுகின்ற வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும், நான் கண்ட, என்னோடு வாழ்ந்த திருநங்கைகளின் வாழ்க்கை அனுபவங்களையும் அவ்வப்போது நினைவுகளால் இருட்டில் புரட்டும்போது கவிதைகளாய் வெளிச்சக்கீற்றாய் வார்த்தைகளில் விழும். வாழ்வை கவியாக்கும் அனுபவம் அவ்வளவு எழுதல்ல. வாழ்வே கவியானவர்க்கு அது எளிதில் சாத்தியம். ஆனால் வலியை கவியாக்கும்போது மீண்டும் வலிக்கும்.

மனதைப்பிழிந்தால் குருதி கொப்பளிக்கும், அனலாய் கோபங்கள் தகிக்கும், ஏமாற்றமும், காயங்களும் கண்ணீரில் கரையும்.  இவற்றைத்தாண்டி இதயத்தின் உள்ளே எங்கேயோ ஒரு மூலையில் திருதிருவென்று விழித்துக்கொண்டு குறுகி அமர்ந்திருக்கும் காதல் மலங்கமலங்க விழிக்கும்.  

மனிதர்கள் மறுத்த எனதடையாளமே கேள்விக்குறியாய் வளைந்திருக்கையில்தான் சகஉயிர்களின் வேதனை புரிகிறது. எனது முதல் நூல் குறி அறுத்தேன் விகடன் பிரசுரம் மூலமாக வெளியாகியுள்ளது. அதில் இவ்வனுபவங்களை கவிதைகளாய் கதைத்திருக்கிறேன்.

வாசிக்க விகடன்.காம் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.



குறி அறுத்தேன் நூலை புதுவை மாநில சமூக நலத்துறை அமைச்சர் ராஜவேலு அவர்கள் ஆரோவில் நகரிலுள்ள சோழா கார்டன் தோட்டத்தில் ஜனவரி அன்று வெளியிட்டார்.





பிறகு கோவையில் ஜனவரி அன்று கோவை தேஜாவு ஹோட்டலில் எனது தாயார் ராஜாமணி அம்மாள் நூலை வாசகர்கள், கவிஞர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் மத்தியில் அறிமுகம் செய்தார். 

என் அம்மா என் நூலை கோவையில் அறிமுகம் செய்து பேசும்போது "மாற்றுப்பாலினமாக தன்னை அடையாளப்படுத்தும் குழந்தைகளை பெற்றோர்கள் அரவணைத்து அன்பும் நல்ல கல்வியும் தந்தால் அக்குழந்தைகள் எதிர்காலத்தில் சிறப்பாக மிளிர்ந்து உங்களை பெருமிதம் கொள்ள செய்வார்கள்" என்றார்.

No comments: