Wednesday, October 12, 2016

குழந்தைகளை கவரும் திருநங்கை டீச்சர் வினிதா!

சென்னை எர்ணாவூரில் உள்ள வர்மா நகரில் கோடைக்கால வகுப்புகளில் குழந்தைகளுக்கு ஓவியக்கலையும், படைப்பாற்றல் பயிற்சிக்கலையும்  கற்றுக்கொடுக்கிறார் திருநங்கை வினிதா. கல்கத்தாவில் பிறந்து திருநங்கை என்பதால்  குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு  சென்னை வந்த வினிதா தமிழ் கற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் திருநங்கைகள் குடியிருக்கும் சுனாமி குடியிருப்பு பகுதியில் மற்ற திருநங்கைகளுடன் வசித்து வருகிறார்.



திருநங்கைகளுக்காக சமூக மேம்பாட்டு தொண்டு நிறுவனமான 'சகோதரி' அமைப்பின் மூலமாக  ஓவியப்பயிற்சி கற்றுக்கொண்ட வினிதா  சென்னையில் அவர் வாழும் எர்ணாவூர் பகுதியில் உள்ள வர்மா நகரில் கோடைக்கால வகுப்புகளில் குழந்தைகளுக்கு ஓவியங்களையும், படைப்பாற்றல் பயிற்சிக்கலையும்  கற்றுக்கொடுக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில் "ஓவியப்பயிற்சியின் போதே எனக்கு மிகுந்த  ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. தினமும் வரையத்தொடங்கினேன்.  நண்பனின்மூலமாக  குழந்தைகளுக்கு கற்பிக்கும் வாய்ப்பு வந்ததும் அகமகிழ்ந்த்தேன். குழந்தைகள் என்னிடம் விரும்பிக்கற்றுக்கொள்கின்றனர். முதலில் இரண்டுபேர் மட்டுமே வந்தனர். இப்போது 40 பேர் வருகின்றனர்.ஒவ்வொரு வகுப்பிற்கும் இப்பயிற்சியை நடத்தும் நிறுவனத்தினர் 500 ரூபாய் கட்டணமாக தருகின்றனர். மரியாதையும் கிடைக்கிறது, மகிழ்ச்சியும் கிடைக்கிறது" என்கிறார்.

தனக்கு தொடர்ந்து  கற்றுக்கொள்ள  ஆர்வம் உள்ளதாகவும், அதன்மூலம் வாய்ப்புகள் வந்தால் தனது பொருளாதாரநிலை  என்றும் கூறினார்  வினிதா. பெங்காலி, தமிழ் மற்றும் ஆங்கில  மொழிகள்  பேசுகிறார் வினிதா.

கல்வி என்ற ஒன்றே திருநங்கைகளுக்கு மிகப்பெரிய வழிகாட்டியும்,  வாழ்க்கை துணையுமாகும்.



நீங்கள் திருநங்கைகளுக்கு என்றும் ஆதரவாக இருப்பீர்களா? சகோதரி தொண்டு நிறுவனத்தில் தன்னார்வ தொண்டராக இணை ந்துகொள்ளுங்கள். www.sahodari.org மற்றும் முகநூல்  இணைய முகவரி www.facebook.com/sahodari.

YouTube Channel subscribe செய்ய : www.tinyurl.com/KalkiVideos

ஓவியங்களை விற்று திருநங்கைகளை படிக்கவைக்கிறேன் - திருநங்கை கல்கி

ன்று நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கல்வியை இழந்து நல்லதொரு வாழ்க்கையை இழந்து தவிப்புடன் உண்மையான அன்புக்காகவும், மரியாதையான வாழ்க்கைக்காவும் ஏங்குகிறார்கள்.
கடந்த பத்துவருடங்களாக திருநங்கைகளின் ஓலக்குரலை என் எழுத்திலும், கவிதையிலும், திரைப்படத்திலும், ஓவியங்களிலும் ஒலிக்கிறேன்.

ஏராளமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உரையாற்றியிருக்கிறேன். அங்கெல்லாம் மாற்றுப்பாலினர் ஒருசிலர் மட்டுமே கல்விகற்பதை காண்கிறேன். மற்றவர்களெல்லாம் தெருவில் அன்றாட தேவைகளுக்காக இருக்கிறார்கள். சமுதாயத்தின் எத்தனை பெரிய அவலம் இது?

கல்வி மறுக்கப்படும்போது நல்லதொரு சிறப்பான எதிர்காலம் மறுக்கப்படுகிறது.  வீட்டைவிட்டு துரத்தப்படும் அல்லது வெளியேறும் திருநங்கைகளும், திருநம்பிகளும் அன்றாட வாழ்க்கைக்கான தேவைகளுக்காகவே போராடும் போராட்ட வாழ்க்கையில் கல்வி புறந்தள்ளப்படுகிறது.  அந்தக்கல்வியை திருநங்கைகளுக்கு மீண்டும் வழங்க நிதிஆதாரங்கள் தேவை. அரசாங்கம் செய்யும் என்றெல்லாம் காத்திருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 
கடவுள் என்னை திருநங்கையாக படைத்து எனக்கு ஏராளமான திறன்களையும் வரங்களாக வழங்கியிருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.



 எனது ஓவியத்திறனை முழுவதுமாக பயன்படுத்த தொடங்கியுள்ளேன். அது எனக்கு ஒரு தெய்வீக, திவ்ய பயணமாக அனுபவமாக இருக்கிறது.  இன்று எனது ஓவியங்களை விற்று திருநங்கைகளுக்கு கல்வி வழங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். அதில் வெ
ஓவியப்பணியில் கல்கி
ற்றியும் பெற்று வருகிறேன். 

வரும் நவம்பரில் ஒரு அற்புத மாலைப்பொழுதில் எனது ஓவியங்கள் விற்ற தொகையை கல்வி கற்க விரும்பிய நான் தேர்ந்தெடுத்த என் திருநங்கை சகோதரிகளுக்கு வழங்குவேன்.

நான் ஒரு திருநங்கை என்பதில் எள்ளளவும் எனக்கு குறையில்லை, கவலையுமில்லை. பெற்றவர்களின் அரவணைப்புப்பெறுவது திருநங்கைகளுக்கு அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.  அதிலும் அவர்களை பெருமைப்படுத்தும் அளவுக்கு நம் செயல்களையும் வாழ்க்கையையும் உயர்த்தவேண்டும். 

'புறக்கணிப்பு' என்ற கல்கியின் ஓவியம்
என்னைப்போன்றோருக்கு உதவும் கலைத்திறமையுடன் என்னை படைத்திருக்கிறார் என்பதே பெரிய வரம். கல்வியே பெரும் சொத்து, மூலதனம், வாழ்க்கையை மாற்றும் மந்திரச்சாவி. அந்தக்கல்வியை வழங்கும் எனது பணிகளை தொடருவேன்.
எனது ஓவியங்கள் விற்பனைக்குள்ள இணையதளம் காண கிளிக் செய்யுங்கள் www.fueladream.com/home/campaign/278.
எனது வலைத்தளம் காண www.kalkisubramaniam.com

Monday, October 10, 2016

அனாதை பாட்டியை அடக்கம் செய்த வடசென்னை திருநங்கைகள்

டந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வடசென்னையை சேர்ந்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த தேசப்பட்டு என்ற மூதாட்டி முதுமையின் காரணமாக இறந்துபோனார்.

வறுமையால் வாடிய, குடும்பம் இருந்தும் கைவிடப்பட்ட ஆதரவற்ற ஒரு மூதாட்டியை அடக்கம்செய்ய பொதுமக்கள் யாரும் முன்வராததால் அந்தபகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் ரேணுகா தேவி, தாரா மற்றும் சில திருநங்கைகள் மூதாட்டியின் ஈமக்கிரியைகளை மகள்களின் ஸ்தானத்தில் இருந்தும் மகன்களின் ஸ்தானத்தில் இருந்தும் செய்தனர்.




திருநங்கை ரேணுகா தேவி மற்றும் அவரின் வளர்ப்புப்பிள்ளை ஆகியோர் கொள்ளி வைக்க சடங்குகள் நிறைவடைந்தன.

இந்த ஈமக்கிரியை நிகழ்வில் 30க்கும் அதிகமான திருநங்கைகள் கலந்துகொண்டனர். மூதாட்டியின் நல்லடக்கத்துக்கான செலவுகளை திருநங்கைகள் பலர் வழங்கினார். சில கட்சிப்பிரமுகர்களும் உதவிகள் செய்தனர்.


மூதாட்டி தேசப்பட்டு அம்மாவின் உறவினர்கள் ஒன்றிரண்டுபேர் வந்திருந்தும் திருநங்கைகள் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை. 
திருநங்கை ரேணுகா தேவி
ஒரு ஆதரவற்ற மூதாட்டியின் இறுதிச்சடங்கை திருநங்கைகள் நடத்தியது கண்டு அந்தப்பகுதி மக்கள் மனம் நெகிழ்ந்தனர்.

ஒரு காலத்தில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு சமூகம் தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தியவிதம் அனைவரையும்  நெகிழவைத்து சிந்திக்கத்தூண்டியது.

வாழ்க ஈர நெஞ்சம் கொண்ட இந்த திருநங்கைகள். கருணை சுரக்கும் அவர்களின் ஈரநெஞ்சை வறுமை ஏதும்செய்துவிடவில்லை. வாழ்த்துவோம் நம் சகோதரிகளை!

- திருநங்கை கல்கி சுப்ரமணியம்
www.kalkisubramaniam.com