Tuesday, February 16, 2016

அம்மா (கவிதையும், ஓவியமும்- திருநங்கை கல்கி)

The Rejection - an Art by Kalki Subramaniam
அம்மா (கவிதையும், ஓவியமும்- திருநங்கை கல்கி)----------

அன்று
என்னை
பெற்றெடுத்து
ஆண்பிள்ளை
பிறந்ததென்று
உச்சிமுகர்ந்து
பெருமிதம் கொண்டாய்
பெயர் வைத்தாய்.

இன்று
புடைவையை
சுற்றிக்கொண்டு
புதிய பெயர்
வைத்துக்கொண்டு
பூக்களை
தலையில் சுமந்து
ஜிமிக்கித்தோடும்
வளையல்களும் ஆட
நம்வீட்டு வாசலில்
கடைசி மன்றாடுதலுடன்
நிற்கிறேன்.
என்னை
நிராகரிக்காதே அம்மா.
ஆணாயினும்
பெண்ணாயினும்
அதுவாயினும்
எதுவாயினும்
நான் உன் பிள்ளைதானே அம்மா.
உன் அன்புக்குரலால்
என்னை உள்ளே அழை.
ஊர் சிரிக்கும்
உறவுகள் உதறிவிடும்
என்று அச்சம்கொண்டு
நீ என்னை
நிராகரித்தால்
நரகக்குழியில்
நானும் விழுவேன்.
ஐயோ
அழாதே அம்மா
நீ என்னை
நிராகரித்தால்
சுயத்தை இழந்து
கைதட்டி காசுகேட்டு
கையேந்துவேனே அம்மா.
ஐயோ
கதவுகளை மூடாதே அம்மா
நீ என்னை
நிராகரித்தால்
என்
பசியாற்ற
ஆடைகளைந்து
ஆண்களுக்கு
விருந்தாக
அம்மணமாவேனே அம்மா.
அம்மா நான்
கொலை செய்தேனா
கொள்ளை அடித்தேனா
நம்
பெண்ணாகத்தானே
ஆசைப்பட்டேன்
நீ என்னை
தூக்கி எறிந்தால்
வீதியில் வெறும்
குப்பையாகத்தான்
விழுவேன் அம்மா.
அம்மா அம்மா
என்னை
ஏற்றுக்கொள்.

- கல்கி சுப்ரமணியம் எழுதிய 'குறிஅறுத்தேன்' நூலிலிருந்து.