Tuesday, March 15, 2011

வரன் பார்க்க அரவாணிகள் தொடங்கியுள்ள இணையம்
அரவாணிகளும் பெண்கள்தான், மதிப்புக்குரிய பெண்கள். அவர்களுக்கும் திருமணம் செய்து, கணவருடன் வாழ வேண்டும், சமூகத்தில் அந்தஸ்துடன் உலவ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்டவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய திருநங்கை கல்கி புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

www.thirunangai.net என்ற பெயரில் கல்கி தொடங்கியுள்ள இந்த இணையதளம், அரவாணிகளுக்கு வரன் பார்க்கும் அருமையான வேலையை செய்கிறது.

கல்கி - பொள்ளாச்சியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தந்தை லாரி தொழிலில் ஈடுபட்டிருந்தார். 2 சகோதரிகள். கல்கி மட்டுமே வீட்டின் ஒரே ஆண் வாரிசு.

கொடைக்கானலில் போர்டிங் பள்ளியில் சேர்ந்து படித்தார்.
சிறு வயதிலேயே தனது சகோதரிகளுடன் அதிக நேரத்தை செலவிட விரும்பாமல் ஆண்களுடனேயே செலவிட விரும்பினார். தனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை அவர் உணர ஆரம்பித்தார். மேலும், அழகான பெண்களை விட துணிச்சலான, உறுதியான பெண்கள்தான் இவரை அதிகம் கவர்ந்தனர்.

13 வயதில் இவரது மனதுக்குள் அலையடித்த உணர்வுகளின் போராட்டத்தை தாயார் கண்டுபிடித்தார். கவலை கொண்டார்.

பள்ளிப் படிப்பிலிருந்து ஒரு நாள் விலகி முழுமையான திருநங்கையாக தன்னை மாற்றிக் கொள்ள முடிவு செய்தார் கல்கி. 14 வயதில் அரவாணிகள் குடும்பத்தில் இணைந்தார். இன்று கல்கி, சகோதரி பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் - இயக்குநர்.

இவர் உருவாக்கியுள்ள திருநங்கை.நெட் இணையதளம், அரவாணிகளுக்கு வரன் பார்த்துத் தரும் வேலையைத் தொடங்கியுள்ளது.

வெளிநாடுகளில் அரவாணிகளுக்கு திருமணம் என்பது சர்வசாதாரண விஷயம். ஆனால் இந்தியாவில் இது மிக மிக கடினமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக அரவாணிகளுக்கு மாப்பிள்ளைகள் கிடைப்பது என்பதும், தேடுவதும் சாதாரண விஷயமல்ல. பல தடைகள், இடையூறுகள், சிக்கல்கள் குறுக்கே நிற்கின்றன.

இதுவே கல்கி தனி இணையதளம் தொடங்க முக்கியக் காரணம். இதுகுறித்து கல்கி கூறுகையில், நிறைய ஆண்களுக்கு திருநங்கைகளுடன் பழக வேண்டும் என விருப்பம் உள்ளது. ஆனால் கல்யாணம் என்று வரும்போது மறுத்து விடுகிறார்கள்.

எங்களது சமூகத்தைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு நல்ல ஆண்களைக் கல்யாணம் செய்து குடும்பமாக வசிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சமூகத்தில் கெளரவத்தோடு வாழ வேண்டும் என்பதே அவர்களின் ஆசை.

சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் அரவாணிகள். அப்படிப்பட்டவர்களுக்கான தளம்தான் இந்த திருநங்கை.நெட்.

எங்களது இணையதளம் மூலம் வரன்களைத் தேடிக் கொள்ளலாம், நல்ல ஆண் துணைவர்களைத் தேடிக் கொள்ளலாம்.

எல்லோருக்கும் போலவே எங்களுக்கும் காதல் வரும். நல்ல கணவன் வேண்டும் என்ற ஆசையம் வரும். எங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றாலும், குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொண்டு அந்தக் குழந்தையுடனும், கணவருடனும் இயல்பான வாழ்க்கை வாழ முடியும் என்றார்.

தற்போது இந்த இணையதளத்தில் சில அரவாணிகள் தங்களுக்கு வரன் தேவை என்று கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இந்த அரவாணிகளை கல்யாணம் செய்து கொள்ள விரும்பியும், துணைவிகளாக்கிக் கொள்ளவிரும்பியும், இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்டவற்றிலிருந்து 200க்கும் மேற்பட்ட பதில்கள் வந்துள்ளனவாம்.

அவர்களில் டாக்டர்கள், பொறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், தொழிலதிபர்களும் அடக்கமாம்.

இருப்பினும் தீவிரப் பரிசீலனைக்குப் பிறகே வரன்கள் இறுதி செய்யப்படும் என்கிறார் கல்கி.

அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி (மகளிர் தினம்) அல்லது பிப்ரவரி 14ம் தேதி (காதலர் தினம்) ஆகிய ஏதாவது ஒரு நாளில் முதல் கல்யாணம் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கல்கி.

இந்தியாவில் அரவாணிகள் அல்லது திருநங்கைகள் குறித்த பார்வை மாறி வருகிறது. அரவாணிகளும் கூட மாறி வருகிறார்கள். பாலியல் தொழில், பிச்சை எடுப்பது உள்ளிட்டவற்றிலிருந்து மீண்டு வருகிறார்கள். இதில் இன்னும் ஒரு படி மேலே போய், சாதாரணப் பெண்களைப் போல திருநங்கைகளும், கணவன், குடும்பம் என்ற கட்டமைப்புக்கு மாறும் சூழல் தற்போது வந்துள்ளதாகவே கருதுகிறேன் என்கிறார் கல்கி.

1 comment:

mukilakil said...

நல்ல முயற்சி!
அவசியமான முயற்சி!
வாழ்த்துகள்!
பாராட்டுகள்!
--டாக்டர் எஸ்.எஸ்.அன்புமதி