Monday, March 24, 2008

அனுதாபமும், பரிதாபமும் அவர்களிடமே இருக்கட்டும்..

திருநங்கைகள் மேல் அனுதாபமும், பரிதாபமும் கொள்வது தேவையற்றது என்பது என் கருத்து. எங்களுக்குரிய உரிமைகளை தரவேண்டும். கேலி செய்யும் கூட்டம் ஒரு பக்கம் என்றால், பரிதாபப்பட்டு எங்களின் சக்தியை முடக்கும் மனிதர்களும் உண்டு. எங்களை சமமாக மதிக்கவேண்டும். சகமனுஷி என்ற உணர்வு இருந்தாலே போதும். பரிதாபப்படுவதால் என்ன நன்மை?

துன்பப்படும் நங்கைகளுக்கு உதவவேண்டும். ஆனால் இரப்பவர்க்கு அல்ல. வணிகத்தலங்களில் கைதட்டி பிச்சை எடுப்பவர்களின்மேல் எனக்கு கோபம் உண்டு. பலர் பயந்துதான் பணம் கொடுக்கிறார்கள். அவர்களின் அந்த பயமே வெறுப்பாக மாறுவதையும் பார்த்திருக்கிறேன். வேதனைப்பட்டிருக்கிறேன். ஆனால் பிச்சை எடுக்கும் நங்கைகள் சொல்லும் காரணமும் சரியானதுதான். சமூகம் வேலை அளிப்பதில்லை. தள்ளிவைத்து பயத்துடன்தான் பார்க்கிறது. மாற்றங்கள் சமூகத்தில்தான் முதலில் தேவை. பிறகுதான் திருநங்கைகளிடம்.

படித்தவர்களின் கடமைகள் நிறைய உண்டு. எங்களில் படித்தவர்களை பற்றித்தான் சொல்கிறேன். நாங்கள் நல்ல ரோல் மாடல்கள் ஆனால்தான் மாற்றங்கள் பலப்படும்.

எது பெண்மை?


திருநங்கை என்பதாலேயே பூவும், புடவையும் உடுத்தி அச்சம், நாணம், மடம் மற்றும் இன்ன பிற சங்கதிகள் இருக்கவேண்டும் என்று பலர் என்னிடம் சொன்னதுண்டு. ஏன்.. என் உயிர் தோழர்கள்கூட என்னிடம் சொன்னதுண்டு. அதை அப்படியே நான் ஏற்றுக்கொண்டதில்லை. பெண்மை என்பது அடக்கமும், அழகும் அல்ல.

பெண்மை என்பது வல்லமை, ஆற்றல், அறிவு... உடையும், நடையும் வெறும் பாவனைகள். பெண்மை என்பது சிகரம், சுதந்திரம், தூய்மை.